அடைக்கலத்திற்க்கான சாலை (Road to Refuge)

உபா 19:2,3 நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய். கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/SEYX-7WIWxY

பட்டணங்களை இணைக்க ஒவ்வொரு அரசாங்கமும் சாலைகளைப் போடுவதுண்டு. இந்தியாவிலுள்ள பட்டணங்களை இணைக்க பொதுவாக இருவழிப்பாதைகள் இருக்கும். தொலைதூரப் பட்டணங்களை இணைக்க தேசிய நெடுஞ்சாலைகள் காணப்படுகின்றன. அவைகள் NH 44, NH 47 போன்ற பெயருடன் அழைக்கப்படும். அதுபோல ஆண்டவர் மோசேயிடம் மூன்று அடைக்கலப்பட்டணங்களை உண்டுபண்ண வேண்டுமென்றும், அந்தப் பட்டணங்களுக்குச் செல்ல வழியை உண்டுபண்ண வேண்டும், அதாவது சாலையை உண்டுபண்ண வேண்டும் என்றும் கூறினார். தெரியாமல் யாராவது ஒருவனைத் தாக்கி, தாக்கப்பட்டவன் உயிரிழந்தால், தாக்கியவன் அடைக்கலமாவதற்கு அடைக்கலப்பட்டணமும், சாலையும் உண்டாக்கப்பட்டது.

இன்று நமக்கு அடைக்கலமாயிருக்கும் தேவனைச் சென்றடைய ஒரே வழி இயேசுவாகக் காணப்படுகிறார். இயேசுவே சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவா 14:6). நாம் மோட்சம் செல்லவும், பிதாவின் சந்நிதானத்திற்குச் செல்லவும் வேறெந்த மார்க்கமும் கொள்கையும் நமக்கு இல்லை. நமக்கு இருக்கும் ஒரே வழி இயேசுவாகக் காணப்படுகிறார். ஒரு சகோதரன் அநேக வாரங்கள் சபைக்கு வராததால், போதகர் “ஏன் நீங்கள் அநேக மாதங்களாக சபைக்கு வரவில்லை?” என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார், “ஐயா, எனக்குக் குடிப்பழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆகையால் நான் என்றைக்குக் குடிப்பழக்கத்தை விடுகிறேனோ அன்றைக்குத்தான் இனிமேல் சபைக்கு வரவேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்” என்று சொன்னார். இன்னொரு விசுவாசி “ஏன் அநேக மாதங்களாக சபைக்கு வரவில்லை?” என்று கேட்டதற்கு அவர் சொன்னார், “எனக்கு எப்பொழுது கடன் பிரச்னை தீருமோ அன்றுதான் நான் சபைக்கு வரவேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்” என்று சொன்னார். இது எவ்வளவு மடமையான செயல் என்று பாருங்கள். இயேசு இல்லாமல் ஒருவரும் குடிப்பழக்கத்தையோ அல்லது வேறெந்தப் பாவத்தையோ விடமுடியாது. இயேசு இல்லாமல் கடன் பிரச்னையும் சுலபமாகத் தீர்க்க முடியாது. அநேகர் நினைப்பதுண்டு, பரிசுத்தமான வாழ்வு வாழ்ந்தால்தான் கிறிஸ்துவை அடைய முடியும் என்பதாக. ஆனால் கிறிஸ்துவே பரிசுத்தத்திற்கு வழி என்பதை அறியாமல் போய்விட்டார்கள், நானே உங்களை பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்ற வசனத்தையும் அறிய தவறிவிட்டார்கள். இயேசு தான் நமக்கு வழி என்ற சத்தியத்தைப் புரிந்தவர்கள், சபைக்கு வராமல் இருக்க மாட்டார்கள்.

பவுல் சொல்லுகிறான், “தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்” (எபே 2:17,18) என்பதாக. “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” என்று எபி 7:25 கூறுகிறது. தமது மூலமாய், அதாவது இயேசுவின் மூலமாய் மாத்திரமே நாம் தேவனிடத்தில் சேர முடியும் என்று எபிரெயர் நிருபத்தை எழுதிய ஆசிரியர் கூறுகிறார். ஆகையால் நாம் சென்றடைய வேண்டிய அடைக்கலப்பட்டணத்திற்கு ஒரே வழி இயேசுவாகக் காணப்படுகிறார். அந்த இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஒருநாளும் விட்டுவிடாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *