கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது, நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும் (நீதி. 11:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tpiEQbOKHOI
ஒருவனுடைய ஐசுவரியம் அல்லது நீதி இவற்றில் எது முக்கியம் என்பதைக் குறித்து சாலொமோன் ஞானி எழுதும் போது, கர்த்தருடைய கோபத்தின் நிமித்தம் தண்டனைகள் வரும்போது, மனுஷனுடை ஐசுவரியம் அவனுக்கு உதவாது என்று எழுதினார். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் என்றும், ஐசுவரிய வானுக்கு அனேகச் சிநேகிதர்கள் உண்டு என்றும், தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியம் என்றும், பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என்றும் வேதம் கூறும் பொழுது, தேசத்தின் தலைவர்களும், தொழிலதிபர்களும், அனேக ஐசுவரிய வான்களும் கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதத்தை, கர்த்தருக்கு பயந்து தாழ்மையோடு ஆண்டவருக்கு பிரியமான விதங்களில் பயன்படுத்தாமல் காணப்படும் பொழுது, கர்த்தருடைய கோபாக்கினையின் பாத்திரமாக மாறிவிடுகிறார்கள். இந்நாட்களில் தேசத்தின் தலைவர்கள் தங்கள் தேசங்களை மற்ற தேசங்களைப் பார்க்கிலும் மேன்மையாய் காட்டுவதற்கும், ஜனங்களை அழிப்பதற்கும் ஆயுதங்களுக்குச் செய்யும் செலவுகளைக் கணக்கிட்டால் முழு உலகத்திலும் காணப்படுகிற ஜனங்களுடைய வறுமையைப் போக்குவதற்கு அது போதுமானதாய் காணப்படும். தன் காலடியில் காணப்பட்ட லாசரு என்ற தரித்திரனுடைய தேவையை உணராதபடி சம்பிரதமாய் வாழ்ந்த ஐசுவரிய வான் மரித்த பின்பு அக்கினி கடலில் வேதனைப் பட்டது போல, இப்படிப்பட்டவர்களுடைய முடிவு காணப்படும். ஐசுவரியவானால் கர்த்தருடைய கோபாக்கினையிலிருந்து தப்பிக்க முடியவில்லை, ஒரு விரல் நுனியின் சொட்டு தண்ணீர் கூட அவனுக்குப் பாதாளத்தில் கிடைக்கவில்லை. அவ்வண்ணமாகவே மரிக்கும் பொழுது அல்லது கர்த்தருடைய வருகையின் வேளையில் தேவனோடு சஞ்சரிக்காத அனேகருடைய முடிவு காணப்படும்.
நீதிக்குரிய வாழ்வு வாழ்கிறவர்கள் நித்திய மரணத்திலிருந்து தப்பிவிடுவார்கள். நீதிமான் நித்திய அஸ்திபாரமுள்ளவன் என்றும், செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும் என்றும், நீதியை விதைக்கிறவன் மெய்ப்பலனை அறுப்பான் என்றும், நீதிமான்களுடைய வேர் அசையாது என்றும், நீதிமான்களுடைய வீடு நிலைநிற்கும் என்றும், நீதிமான் நெருக்கத்தினின்று நீங்குவான் என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் தான் ஆண்டவர் நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும் என்றார். அநீதி எல்லாம் பாவம் என்ற சிந்தனையோடு, கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களைத் தவிர்த்து, தேவனைப் போல ஜனங்களை சினேகிக்கிறவர்களாக வாழ உங்களை அர்ப்பணியுங்கள். யோபுவின் நீதிக்குரிய ஜீவியம் அவனை மரணத்தினின்று தப்புவித்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்;.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆபத்து வேளைகளில் நம்முடைய ஆஸ்திகளும், ஐசுவரியங்களும் நமக்கு உதவாது என்பதை அறிந்து, மேலானதைத் தேடுங்கள், உங்கள் பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், ஒவ்வொரு நாளும் இன்னும் நீதிக்குரிய ஜீவியம் செய்ய வேண்டும் என்று வாஞ்சியுங்கள். அது பூமிக்குரிய ஜீவியத்தில் உங்களை மரணக்கண்ணிகளுக்குத் தப்புவிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதுபோல உங்கள் நீதிக்குரிய வாழ்வானது கர்த்தருடைய வருகையிலும் உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

