சங் 63:3. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/j8Ekg3uS5iE
உங்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு என்ன பதில் சொல்லுவீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். இன்று உங்களிடமிருந்து உயிர் எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் உங்கள் மேல் இருக்கும் கிருபை எந்நாளும் இருக்கும் என்ற கேள்வியும், உங்கள் உயிர் பத்திரப்படுத்தப்படும் ஆனால் உங்கள் மேலுள்ள கிருபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற கேள்வியையும் உங்கள் முன்வைத்தால் எதை தெரிவுசெய்வீர்கள்? தாவீதிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், தயக்கமின்றி என்னுடைய ஜீவனைக் காட்டிலும் எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபை நல்லது என்றே சொல்லுவான். காரணம் அவனுடைய மீறுதல்கள் கர்த்தருடைய கிருபையினால் மன்னிக்கப்பட்டது. அவனுடைய ஜெபமும் அப்படித்தான் இருந்தது. சங் 51 : 1-ல் அவன் ஜெபிக்கிறான், “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்” என்பதாக. கலாத்திய விசுவாசிகள் தங்களுக்குக் கிடைத்த கிருபையிலிருந்து விழுந்தார்கள் என்று கலா 5 : 4 கூறுகிறது. கலாத்திய சபை கிருபையைக் காட்டிலும் ஜீவனை பெரிதாகக் கருதிவிட்டார்கள்.
பழைய ஏற்பாட்டில் கிருபாசனத்தண்டைக்கு சுலபமாக செல்ல முடியாது. வருடத்திற்கு ஒருமுறை ஆசாரியர்கள் தான் செல்ல முடியும். ஆனால் இன்றோ, இயேசு சிந்தின இரத்தத்தின் மூலம் நாம் கிருபாசனத்தண்டைக்கு செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இப்படிப்பட்ட கிருபையை நாம் போக்கடிக்கிறவர்களாக காணப்படக்கூடாது.
ஏன் கிருபை ஜீவனைப்பார்க்கிலும் நல்லது? புதிய ஏற்பாட்டில் ஒரு அருமையான வசனம் இருக்கிறது. எபே 2 :6 , 7 கூறுகிறது, “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” என்பதாக. அவருடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியம் தான் உன்னதங்களிலே நம்மை உட்காரச்செய்கிறது. இப்பொழுது சொல்லுங்கள் இவ்வுலகத்துக்குரிய காரியங்களையே செய்து ஜீவனை விடுவதைவிட, கிருபையை போக்கடிக்காமல், அதை பாதுகாத்து, உன்னதங்களில் உட்காருவது எவ்வளவு முக்கியம். நாம் இவ்வுலக வாழ்க்கைக்கு அடுத்த காரியங்களையே சிந்திக்காமல் மகிமையான எதிர்காலத்தைக் குறித்து சிந்திக்கிறவர்களாய் காணப்படவேண்டும்.
வேதாகமத்தின் கடைசி வசனத்திற்கு முன்பாக “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்று தன்னுடைய இரண்டாம் வருகையைக் குறித்து சொன்னபிறகு, ஒரு ஆசீர்வாதத்துடன் வேதாகமத்தை ஆவியானவர் முடிக்கிறார். “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்” என்பதாக. அப்படியென்றால் கர்த்தருடைய கிருபை எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கிருபையில் வளருங்கள், கிருபையைப் பெற்றுக்கொள்ள தாழ்மையாய் ஜீவிக்கப் பழகுங்கள், கிருபை உங்கள் வாழ்க்கையில் பெருக தேவனுக்கு அதிகமாக ஸ்தோத்திரம் செலுத்துங்கள். தாவீதை போல நீங்களும் சொல்லுங்கள், ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது என்பதாக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

