யோவா 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hvyrMXPjJZI
மேற்குறிப்பிட்ட வசனத்தில் கனிகொடாதது, கனிகொடுக்கிறது, அதிக கனிகளைக் கொடுக்கிறது என்று கனிகளின் நிலைகளை ஒரே வசனத்தில் பார்க்கலாம். மாத்திரமல்ல, இதே அதிகாரம் 5ஆம் வசனம் மற்றும் 8ஆம் வசனத்தில் மிகுந்த கனிகள் என்ற நிலையையும் இயேசு குறிப்பிடுகிறார். ஆகையால் கனிகள் கொடுக்கிற வாழ்வில் மொத்தத்தில் 4 நிலைகள் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் No Fruits, Fruits, More Fruits, Much Fruits என்று சொல்லலாம். நாம் கிறிஸ்தவ வாழ்வில் இந்த நான்கு நிலைகளில் எந்த நிலையில் நின்றுகொண்டிருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். இதில் முதல் நிலை மிகவும் ஆபத்தான நிலை. கனிகொடுக்காத மரங்களை ஆண்டவர் வெட்டிப் போட்டுவிடுவார் என்று வசனம் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட காரியங்களில் கனிகொடுக்கிற விசுவாசிகள் அதே நிலையில் நின்று தேங்கிவிடுகிறவர்களாக காணப்படக்கூடாது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நாம் ஒரு நிலையில் தேங்கக்கூடாது. சிலர் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் கணுக்கால் அளவில் திருப்தியடைவதுண்டு, சிலர் முழங்கால் அளவில் திருப்தியடைவதுண்டு, சிலர் இடுப்பளவில் திருப்தியடைவதுண்டு, ஆனால் நாம் நீச்சால் அனுபவத்திற்குள்ளாக கடந்து செல்ல வேண்டும் என்றே கர்த்தர் விரும்புகிறார். இங்கேயும் பாருங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நான்கு நிலைகளை ஆண்டவர் குறிப்பிடுகிறார்.
கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். மரம் மற்றும் புல்லை வளர்ப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அவற்றை Pruning அதாவது சுத்திகரிக்கும்போது வேண்டாத கிளைகளை வெட்டுவது மாத்திரமல்ல, நன்றாக வளர்ந்த கிளைகளையும் அவ்வப்போது வெட்டுவதுண்டு. காரணம் இன்னும் நன்றாக கிளைகள் வளரவேண்டும் என்பதற்காக நன்றாக இருக்கிற கிளைகளையும் வெட்டுவார்கள். அதுபோல தான் ஆண்டவர் சில வேளைகளில் நம்மில் இருக்கும் வேண்டாத கிளைகளை கத்தரிப்பது மாத்திரமல்ல, நல்ல கிளைகளையும் கத்தரிப்பார். காரணம் நம்மிலிருக்கும் தரமான கனிகளை இன்னும் தக்கவைத்துக்கொள்ளவும், எண்ணிக்கையிலும் அதிக கனிகளை கொடுக்கும்படியாக கர்த்தர் அப்படி செய்வார். ஆகையால் ஆண்டவர் நம்மை சுத்திகரிக்கும்போது, சில வேளைகளில் வலி ஏற்பட்டாலும், அது அதிக கனிகளை கொடுப்பதற்காகவே அப்படி செய்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஆண்டவர் கனிகொடுக்காத பாத்திரங்களையல்ல, கனிகொடுக்கிற பாத்திரங்களையே அதிக கனிகொடுக்கும்படி செய்கிறார். தாலந்தை குறித்த உவமையை இயேசு சொல்லும்போது பத்து தாலந்தையுடையவனுக்கு இல்லாதவனிடத்திலிருந்து எடுத்து இன்னும் அதிகமான தாலந்தை கொடுத்தார். நீதியில்லாதவனையல்ல, நீதியுள்ளவன் தான் இன்னும் நீதியுள்ளவனாகட்டும் என்று இயேசு சொன்னார். பரிசுத்தமில்லாதவனல்ல, பரிசுத்தமுள்ளவன் தான் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று இயேசு கூறினார். கிருபை மாத்திரமல்ல, கிருபையின் மேல் கிருபை என்றே யோவான் 1:16-ல் இயேசு வாக்குப்பண்ணினார். ஆகையால் உங்கள் கனிகள் இன்னும் அதிகமாகவும், மிகுந்த கனிகளை கொடுக்கும்படியாகவும் இருக்க நீங்கள் இயேசுவில் நிலைத்திருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

