முன்மாதிரி (Role Model)

நியா 7 : 17 அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1Lv5E2Eg7-U

அநேகருக்கு அநேகர் முன்மாதிரியாக இருப்பார்கள். நாமும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது. இவர்களையெல்லாம் எதிர்கொள்ளும்படி தேவன் தெரிந்துகொண்ட முன்னூறு பேரை கிதியோன் அனுப்பி அவன் வீட்டில் உட்கார்ந்துவிடவில்லை. அவன் நான் என்ன செய்கிறேனோ அதைச் செய்யுங்கள் என்று செய்துகாட்டினான். இதைத்தான் மேற்குறிப்பிட்ட வசனத்தில் கிதியோன் சொல்லுகிறான், நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதாக.

இன்று அநேகர் இதைச் செய் அதைச் செய் என்று கட்டளையிடுவார்கள், ஆனால் தங்கள் கையினால் ஒரு வேலையையும் தொடமாட்டார்கள். நம்முடைய குரு இயேசுவைக் கவனித்துப் பாருங்கள். அவர் தன்னுடைய சீஷர்களைப் பார்த்து நீங்களெல்லாரும் ஒருவர் பாதத்தை ஒருவர் கழுவுங்கள் என்று கட்டளை மட்டும் கொடுத்துவிட்டு சும்மா உட்கார்ந்துவிடவில்லை. மற்றவர்கள் கால்களைக் கழுவும்படி அவர் முதலாவது செய்து காட்டினார். தன்னுடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது வியாதியஸ்தர்களை குணமாக்குங்கள் என்று சொல்லுவதற்கு முன்பாக அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி காண்பித்தார். நாம் ஒவ்வொருவரும் அவரவருடைய சிலுவையைச் சுமக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர், அவர் தன்னுடைய சிலுவையை முதலாவது சுமந்து நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து சென்றார். எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள் என்று பிலிப்பியர் 1:27 கூறுகிறது. அதாவது சுவிசேஷம் சொல்லும்படி கட்டளை மாத்திரம் கொடுக்கிறவர்களாக இல்லாமல் நாமும் சுவிசேஷம் அறிவித்து அதற்குப் பாத்திரராய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அப்படி வேதத்தின்படி முன்மாதிரியாக வாழும்போதுதான் உங்கள் பட்டயம் கர்த்தருடைய பட்டயமாக மாறும். அதாவது நீங்கள் கையிட்டுச் செய்யும் காரியத்தை கர்த்தரே கையிட்டுச் செய்து வாய்க்கச் செய்வார். வார்த்தையாகிய இயேசு மாம்சத்தில் வெளிப்பட்டதுபோல, நம்முடைய வார்த்தையும் வாழ்க்கையாக மாற வேண்டும். நாம் சொல்லுவது ஒன்று செய்வது மற்றொன்றாக இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று கற்பிக்கிறோமோ அதை நாமும் செய்கிறவர்களாகக் காணப்பட வேண்டும்.

இன்று சில பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் சரியாக சபைக்குச் செல்ல வேண்டும், வேதம் வாசிக்க வேண்டும், ஜெபம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் காணப்படும். ஆனால் தாங்களோ இவைகளைச் செய்கிறவர்களாகக் காணப்பட மாட்டார்கள். நமக்கு முன்மாதிரியை வைத்துச் சென்ற இயேசுவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி நாமும் அவர் செய்ததையே செய்கிறவர்களாகக் காணப்பட வேண்டும். அப்படி செய்த பவுல் தான் என்னை பின்பற்றுங்கள் என்று கூறினான். நாம் அவ்வாறு கூற முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *