நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார் (1 கொரி. 15:3,4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/uWDtP2sD7Zw
சுவிஷேசம் என்பதின் அர்த்தம் நற்செய்தி என்பதாகும். உலகில் பல நல்ல செய்திகள் காணப்பட்டாலும், இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம் நம்மைப் பாவங்களறக் கழுவி நமக்கு இரட்சிப்பைத் தந்தார் என்பதுதான் எல்லாச் செய்திகளை விட நல்ல செய்தியாய் காணப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை ஒரு மனிதனிடமிருந்தும் அவன் பெற்றுக்கொள்ளவில்லை, அவன் இயேசுவினிடத்திலிருந்து அதைப் பெற்றுக்கொண்டான். மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன், நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று கலா. 1:11,12-ல் அவர் எழுதியதைப் பார்க்கமுடிகிறது. அவர் பெற்றுப் பிரசங்கித்த அந்த நற்செய்தியின் உள்ளடக்கம் கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார் என்பதாய் காணப்படுகிறது. அவர் உயிர்த்தெழாவிட்டால் பாவங்களை மேற்கொண்டு வெற்றி வாழ்க்கை வாழ்வது என்பது இயலாத காரியம், சபைகளில் உயிர்த்தெழுதலின் வல்லமையோடு ஆராதனைகள் காணப்பட்டிருக்காது, வாழ்க்கையில் ஒரு நோக்கம் இல்லாதவர்களாகவே நாம் காணப்பட்டிருப்போம். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கு எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும், நித்தியத்தைக் குறித்த நம்பிக்கையையும் தருகிறது.
பவுல் கொரிந்து சபை விசுவாசிகளைக் குறித்து எழுதும்பொழுது, நீங்களும் அந்த சுவிஷேசத்தை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள் என்று 1 கொரி. 15:1-ல் எழுதுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளே, சுவிஷேசம் நமக்கு அறிவிக்கப்பட்டது, நாம் அதை ஏற்றுக்கொண்டோம், ஆனால் இந்நாட்களில் அதில் உறுதியாய் நிலைத்திருக்கிறோமா என்பது கர்த்தருடைய ஆவியானவர் நமக்கு முன்பு வைக்கிற கேள்வியாய் காணப்படுகிறது. பிசாசானவன் நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிஷேசத்திலிருந்து உங்களை வழிவிலகச்செய்வதற்குப் பல வழிகளைக் கையாளுவான். அவனுடையவர்களும் வேறொரு சுவிஷேசத்தை உங்களுக்கு அறிவித்து உங்களை இயேசுவின் சுத்த சுவிஷேசத்தை விட்டு விலகும்படிக்குச் செய்ய முயற்சிப்பார்கள். ஆகையால்தான் நீங்கள் பெற்றுக்கொண்ட சுவிஷேசத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டவர்களாய் காணப்பட வேண்டும். மேற்கத்திய நாட்டின் குடிகள் இயேசுவின் சுவிஷேசத்தில் நிலைத்திராததினால், இந்நாட்களில் காணப்படுகிற அவர்களுடைய சந்ததிகள் கர்த்தரை விட்டு விலகிக் காணப்படுகிறார்கள், அவர்கள் வாழ்கிற தேசங்களும் கர்த்தரை விட்டு விலகி, புறஜாதிகளின் ஆளுகைக்குள் போய்விட்டது, அங்கே புறஜாதிகளின் மார்க்கங்கள் பரவி பெலன் கொள்ளுகிறது. ஆகையால், நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து கிருபையாய்ப் பெற்ற சுவிஷேசத்தில் உறுதியாய் காணப்பட உங்களை முழுவதும் அர்ப்பணியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

