இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள் (2 சாமு. 19:14)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-o5TUsacEXM
தாவீதின் குமாரனாகிய அப்சலோம், தன் சகோதரனைக் கொலை செய்ததின் நிமித்தம், தாவீதை விட்டு ஓடிப்போனான். சில வருடங்கள் கழித்து தன் தகப்பனிடம் திரும்ப வருகிறேன் என்று யோவாப்பின் மூலம் தூது விட்டான். தாவீது, தேவனிடம் விசாரிக்காமலே, அவனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான். அதுவே பின்னாட்களில், அப்சலோம் அவனுக்கு விரோதமாக வஞ்சகம் செய்வதற்குக் காரணமாயிற்று. அவன் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்தில் நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் தாவீது ராஜாவிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான், அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு ஊரைச் சேர்ந்தவன் என்றால், அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது ஆனாலும் ராஜாவிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை, உனக்கு நியாயம் கிடைக்காது. வழக்குகள் உள்ளவர்கள் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு, என்னைத் தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி, முத்தஞ்செய்வான். ஜனங்கள் அது வஞ்சனையான முத்தம் என்பதை அறியாமலே அவனோடு இணைந்துகொண்டார்கள். இவ்வண்ணமாக அப்சலோம் இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான். கடைசியில், இவனே ராஜாவாக தன்னைப் பிரகடனப்படுத்தி, தாவீதை ராஜாங்கத்திலிருந்து துரத்தி, அவனைக் கொலை செய்வதற்கும் முயற்சித்தான். யூதாவின் ஜனங்களும், இஸ்ரவேலர்களும் அப்சலோமை தங்களுக்கு ராஜாவாக ஏற்றுக் கொண்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, சிறிதானதோ, பெரிதானதோ, அனைத்துக் காரியங்களையும் கர்த்தரிடம் விசாரியாமல், மாம்சத்தில் எந்த முடிவையும் எடுத்துவிடாதிருங்கள், அது உங்களுக்கு கேடாய் முடியும்.
அப்சலோம் மரித்தபின்பு, கர்த்தர் சகல யூதாவின் இருதயங்களையும் மீண்டும் தாவீதுக்கு நேராகத் திரும்பினார். அவர்கள் அனைவருடைய இருதயங்களும் ஒரு மனிதனுடைய இருதயத்தைப் போல இணங்கினது. அவர்கள் தாவீதை மீண்டும் ராஜாவாக்க ஒருமனப்பட்டுக் கூடிவந்தார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, இந்நாட்களில் தேவ ஜனங்களுடைய இருதயம் பரலோக தாவீதாகிய இயேசுவுக்கு நேராக ஒருமனப்பட்டால் நலமாயிருக்கும். ஆதி சபையின் நாட்களில், விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆவியானவர் அவர்களை முழுவதுமாய் ஆட்கொண்டதினால் ஒருமனதை அவர்களுக்குள் கட்டளையிட்டார். இந்நாட்களில், நமக்குள் காணப்படுகிற ஒருமனமும், ஐக்கியமுமே நம்முடைய வெற்றியை நிர்ணயிக்கிறது. ஆகையால் ஆவியானவருடைய ஆளுகைக்கு நம்மை முழுமையும் அற்பணித்து, நாம் ஒருமனதோடு காணப்படும் போது, கர்த்தர் அங்கே என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

