உங்களை நடத்துகிறவர்கள்.

உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே (எபி. 13:17).

எபிரேய நிருபம் யூதமார்க்கத்தைக் காட்டிலும் கிறிஸ்தவ மார்க்கம் மேன்மையானது என்பதை மையப்படுத்தி எழுதப்பட்டது. குறிப்பாக 13-வது அதிகாரத்தில் உங்களைக் கர்த்தருக்குள் அனுதினமும் நடத்துகிறவர்களைப் பற்றிய அனேக காரியங்கள் எழுதப்பட்டிருக்கிறது. உங்களைப் போதித்து நடத்துகிறவர்களை நினைத்து, அவர்கள் முடிவைச் சிந்தித்து, அவர்கள் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் என்று 7-வது வசனத்திலும், உங்களை நடத்துகிறவர்களை வாழ்த்துங்கள் என்று 24-வது வசனத்திலும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக 17-வது வசனத்தில் நம்முடைய பிரயோஜனத்திற்காகவும், நாம் ஆசீர்வாதமாகக் காணப்படவும் சில ஆலோசனைகள் எழுதப்பட்டுள்ளது.

உங்களை நடத்துகிற உங்கள் போதகர்களுக்கு கீழ்ப்படியுங்கள். ஒரு நபரை இருளிலிருந்து வெளிச்சத்திற்குள்ளாகவும், பாவத்திலிருந்து இரட்சிப்பிற்குள்ளாகவும், அதன் பின்பு தேவனுடைய சகல ஆலோசனைகளையும் வேதத்திலிருந்து கற்றுக்கொடுத்து, பிரயோஜனமான ஒன்றையும் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் போதித்து, மந்தையை கட்டாயமாய் அல்ல மனப்பூர்வமாய் மேய்த்து, அவலட்சணமான ஆதாயத்திற்காய் அல்ல உற்சாக மனதோடும், இறுமாப்பாய் அல்ல மாதிரிகளாகவும், பூரணத்திற்கு நேராக அனுதினமும் நடத்தி, கிறிஸ்துவின் மகிமையான வருகைக்காய் ஆயத்தப்படுத்துவது தான் மேய்ப்பர்களுடைய பிரதான கடைமையாய் காணப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு கீழ்ப்படியவேண்டும் என்று வேதம் ஆலோசனைக் கூறுகிறது. இயேசு தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.  ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். கிறிஸ்து இயேசுவிலிருந்த கீழ்ப்படிதலின் சிந்தை நமக்குள்ளாகக் காணப்படும் போது தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். கீழ்ப்படிதலோடு அடங்கியிருக்கும் படிக்கும் கர்த்தருடைய ஆவியானவர் ஆலோசனை கூறுகிறார். சாராளை விட்டு ஓடிப்போன ஆகாரைப் பார்த்து தேவ தூதன், நீ உன் நாச்சியாரண்டை திரும்பிப்போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு என்று கூறினான். உங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கும் போது கர்த்தர் உங்களை மேன்மையாய் உயர்த்துவார்.

உங்களை நடத்துகிறவர்களுக்கு அடங்கியிருங்கள். அடங்கியிருக்க வேண்டியதின் காரணமென்ன? உங்களை நடத்துகிறவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறார்கள். ஆத்துமா தான் உள்ளான மனுஷன். ஆத்துமா உணர்வுகளின் இருப்பிடம், நித்தியத்திற்குள் கடந்து செல்லுவதும் ஆத்துமாவே. மண்ணான சரீரம் மண்ணுக்கே திரும்பும். ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு போகும். கர்த்தருக்குள்ளாய் ஜீவிக்கிற ஆத்துமா நித்திய மோட்சத்திற்கும் கர்த்தரை இரட்சகராய் தெரிந்துகொள்ளாத ஆத்துமா நித்திய நரகத்திற்கும்  கடந்து செல்லும். ஆத்துமா விலையேறப்பெற்றது, மனுஷன் ஒருவேளை உலகம் முழுவதையும் ஆதாயம் செய்தாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு  லாபம் என்ன என்று வேதம் கேட்கிறது. அந்த விலையேறப்பெற்ற ஆத்துமாவை கர்த்தருடைய வருகையில் அவருடைய சமூகத்தில் கொண்டு நிறுத்துவதற்கு உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் உங்களை நடத்துகிறவர்கள் காணப்படுவதால் நீங்கள் கீழ்ப்படிந்து அடங்கவேண்டும் என்று காத்தர் விரும்புகிறார். அந்தப் பணியைத் துக்கத்தோடு அவர்கள் செய்யக்கூடாது. கீழ்ப்படியாத, அடங்காத ஆத்துமாக்கள், அவர்களை நடத்துகிறவர்களை வேதனைப்படுத்தும். அது அவர்களுக்கு ஆசீர்வாதமாயிருப்பதில்லை. ஆனால் கீழ்ப்படிந்து, அடங்கியிருக்கும் போது, உங்களை நடத்துகிறவர்கள் சந்தோஷப்படுவார்கள். அது  உங்களுக்கு ஆசீர்வாதமாய் இம்மையிலும், மறுமையிலும் முடியும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *