கர்த்தருடைய வார்த்தை செம்மையானவர்களுக்கு நன்மை செய்யும் (God’s Word do good to the upright)

யாக்கோபு வம்சம் என்று பேர் பெற்றவர்களே, கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? (மீகா 2:7)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6HSzpcOGoJg

தேவனுடைய பிள்ளைகளுக்கு, தேவன் கொடுத்த பெரிதான ஆசீர்வாதம் அவருடைய வார்த்தையாய்க் காணப்படுகிறது. அவருடைய வார்த்தையின்படி நம்மை நன்றாய் நடத்துகிறவர், அவருடைய வார்த்தையை அனுப்பி நம்மை சுகப்படுத்துகிறவர், அவருடைய வார்த்தையை  நேசிக்கிறவர்களுக்குச் சமாதானத்தை அருளுகிறவர். அவருடைய வார்த்தை நம்மை நேர்வழியாய், நீதியின் பாதைகளில் நடத்தும்.

செம்மையாய் நடக்கிறவர்களுக்குக் கர்த்தருடைய வார்த்தை நன்மை செய்யும். செம்மையான வாழ்வு என்பது நீதிக்குரிய, உத்தமமான,  மற்றவர்களுக்குத்  தீங்கு செய்யாத, நேர்மையான வாழ்வு வாழ்வதாகும்.  கபடமற்றவனாய் வாழ்ந்த நாத்தான்வேலைக்  கர்த்தருடைய கண்கள் கண்டு அவனைச் சீஷனாய் மாற்றியது. ராஜாவின் போஜனத்தாலும் பானத்தாலும் தன்னை தீட்டுப்படுத்துவதில்லை என்று தீர்மானித்து, நியாயக்கேடு எதுவும் செய்யாமல் வாழ்ந்த தானியேலின் வாழ்வு பாபிலோனில் கூட ஜெயமாயிருந்தது.   தேவனுக்குப் பிரியமானவன் என்று சாட்சி பெற்று, தேவனோடு முந்நூறு வருஷம் சஞ்சரித்துக் கொண்டிருந்த  ஏனோக்கை கர்த்தர் எடுத்துக் கொண்டார். நீதிமானும் உத்தமனாயும் வாழ்ந்த  நோவாவை கர்த்தர் வெள்ளத்தினால் உண்டான அழிவிலிருந்து தப்புவித்தார். கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் காணப்பட்ட மோசே மரித்த வேளையில் தேவனே அவனை அடக்கம் செய்தார். கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் என்று கூறி தன் உத்தமத்தை வெளிப்படுத்தின் எலியாவை கர்த்தரே அக்கினி இரதமாய் மாறி தன்னோடு சேர்த்துக் கொண்டார். கர்த்தருக்கு முன்பாக என் கரங்களை உயர்த்துகிறேன் என்று கூறி பொருளாசையில்லாமல் கர்த்தரை சார்ந்து வாழ்ந்த ஆபிரகாமை கர்த்தர் தன்னுடைய சிநேகிதனாகக் கண்டார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் செம்மையாய் நடக்கும் போது கர்த்தருடைய வார்த்தை உங்களுக்கு நன்மை செய்யும். கோணலும் மாறுபாடுமுள்ள சந்ததிகளை எங்கும் பார்க்கிறோம். அறியாமையினால் உலகத்தின் ஜனங்கள் அப்படிப்பட்டவர்களாய் காணப்படுகிறார்கள், ஆனால் கர்த்தரையும் அவருடைய வார்த்தைகளையும்   அறிந்தவர்கள் கூட உண்மையில்லாதவர்களாயும், ஒழுக்கமற்றவர்களாயும், தாறுமாறானவர்களாயும் வாழ்வது பரிதாபத்திற்குரியது. கடன் வாங்கி திருப்பிக் கொடாமலிருப்பதும், முறையற்ற வழிகளில் வருமானம் ஈட்ட முயல்வதும், திருப்தியும் மன ரம்மியமும் இல்லாமலிருப்பதும், சபைகளுக்குள் அரசியல் செய்வதும், அசுத்தங்களை விதைப்பதும் கிறிஸ்தவர்களுக்குள் காணப்படுகிறது. கிறிஸ்துவை தரித்தவன்தான் கிறிஸ்தவனாய் காணப்படுகிறான், இந்நாட்களில் கிறிஸ்துவின் சுபாவத்தை இப்படிப்பட்டவர்களிடத்தில் பார்க்கமுடியவில்லை. தேவனைக் குறித்து, தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர் என்று சங். 18:25,26 கூறுகிறது. 

நீங்கள் செம்மையானவர்களாய் நடக்கும் போது, கர்த்தருடைய வார்த்தை உங்களுக்கு நன்மை செய்யும். அவருடைய வல்லமை உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டு உங்களுக்கு அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்யும், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நன்றாயிருப்பீர்கள்.


கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *