நீதி 14 : 26 கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/c-Ipl0ZrL5I
ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அநேக வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஆயுள் காப்பீடுகளை வழங்கும் திட்டத்தை அளிக்கிறார்கள். ஆயுள் காப்பீடு என்பது பொதுவாக குடும்பத் தலைவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் இடையில் ஒரு நிதிப் பாதுகாப்பை உருவாக்கும் ஒப்பந்தமாகும். எதிர்பாராதவிதமாக குடும்பத்தலைவருக்கு ஏதாவது சம்பவித்தால், அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு (Nominee) காப்பீட்டு நிறுவனம் ஒரு பெரிய தொகையை (Sum Assured) வழங்கி உதவுகிறது. குடும்பத் தலைவர் இல்லாத நேரத்திலும் குடும்பத்தின் அன்றாடச் செலவுகள், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த திட்டத்தை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் சாலொமோன் ஞானி இங்கே நமக்குச் சொல்லுகிறான், கர்த்தருக்குப் பயப்படுதலும் பயபக்தியும் மட்டுமே ஒரு மனிதனுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் கொடுக்க முடியும். அவனுக்கு மட்டுமல்ல, அவனுடைய குடும்பத்திற்கும் கூட நிரந்தர பாதுகாப்பை கொடுக்க முடியும். அநேகருக்கு இருக்கும் பயம் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்பதே. ஆனால் தேவபிள்ளைகளுக்கோ, கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்க்கோ திடநம்பிக்கை உண்டு. அவர்கள் அசையாமல் நிற்கும் சீயோன் பர்வதத்தைப் போல இருப்பார்கள். வேதத்தில் அநேக இடங்களில் இந்த காரியத்தை வாசிக்கலாம். ஒரு மனிதன் தேவனுக்குப் பயந்து, தன் வாழ்வில் தேவனுக்குப் பயபக்தியுடன் வாழும்போது, அவன் வாழ்வில் வரும் ஆசீர்வாதம் அவனை மட்டுமல்ல, அவனுடைய முழு குடும்பத்திற்கும் உண்டாகிறது. ஒரு வீட்டின் தலைவன் உண்மையாகவே, தேவனுக்குப் பயந்து, அவர் கட்டளைகளை கைக்கொண்டு, கீழ்ப்படிந்து ஜீவிக்கும்போது, அவனுடைய குடும்பம் உண்மையிலேயே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். வசனம் சொல்லுகிறது, கர்த்தருக்குப் பயப்படுவது என்பது, நம்பிக்கையையும் பாதுகாப்பையும் தருகிறது.
ஒருவேளை நம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்க நம்மிடம் அதிகப் பணம் இல்லாமல் இருக்கலாம், பிள்ளைகளுக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்து வைக்காமலும் இருக்கலாம், ஆனால், நாம் தேவனுக்குப் பயந்து நடந்தால் கர்த்தருடைய ஆசீர்வாதம் மிகப்பெரியதாய் இருக்கும். மாத்திரமல்ல, அது பிள்ளைகளுடைய வாழ்விலும் பாதுகாப்பை கொண்டுவரும். LIC போன்ற காப்பீட்டுத் திட்டத்தை காட்டிலும் மிகப்பெரிய காப்பீட்டு திட்டம் தேவனுக்கு பயப்படுவது. அப்படி தேவனுக்கு பயந்து ஜீவிக்கும்போது, உங்கள் காலத்திற்கு பின்பாகவும் உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆகையால் முதலீடு செய்யவேண்டிய ஆயுள் காப்பீட்டு திட்டம், கர்த்தருக்கு பயப்படுவது என்பதை அறிந்து, அவருக்கு பயப்படும் பயத்தோடு வாழுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

