ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்? ““Lord, what do You want me to do?”

அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ, நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார் (அப். 22:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QzuM_lN616U

ஒரு புதிய மாதத்திற்குள்ளாகக் கிருபையாய் நம்மை அழைத்துக் கொண்டு வந்த தேவனுக்கு, நாம் ஒன்றிணைந்து நன்றி செலுத்துவோம். ஒவ்வொரு நாளும் புதிய கிருபைகளைத் தந்து அவர் நடத்திக்கொண்டு வருவதினால்தான் நாம் அழிந்து போகாமல் காணப்படுகிறோம், கர்த்தரை தேடுகிறவர்கள் எல்லாருக்கும் அவர் நல்லவராய் காணப்படுகிறார்.

இந்த புதிய மாதத்தில் ஒவ்வொரு நாளும் நாம் விழித்தெழும்போது ஆண்டவரைத் துதிப்பதோடு நிறுத்தி விடாமல் இன்றைக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவரிடம் கேளுங்கள். அவ்வாறு நீங்கள் கேட்கும் போது நீங்கள் செய்ய வேண்டியதையெல்லாம் கர்த்தர் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார். அப்போஸ்தலனாகிய பவுல், சவுலாய் காணப்பட்ட போது கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தி, அழித்தொழிக்கும் படிக்கு தமஸ்குவுக்கு  நேராய் போனான்,  போகிற வழியில் கர்த்தர் அவனைச் சந்தித்தார். நீர் யார் என்று அவன் கேட்டபோது, ஆண்டவர் சொன்னார், நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எச்சரித்தார். உடனே, அவன் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, ஆண்டவரை நோக்கி நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டான். அப்பொழுது அவன் என்ன செய்யவேண்டும் என்று அவனுக்கு நியமிக்கப்பட்டதையெல்லாம்  அனனியா மூலம் கர்த்தர்   வெளிப்படுத்தினார். சங்கீதக்காரனாகிய தாவீதும், கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும், உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும், உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும், நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன் என்று சங். 25:4,5ல் ஆண்டவரை நோக்கி வேண்டுதல் செய்கிறதைப் பார்க்கமுடிகிறது. 

கர்த்தருடைய பிள்ளைகளே, ஒவ்வொரு நாளும் ஆண்டவரை நோக்கி, இன்றைக்கு நான் என்ன செய்ய வேண்டும், இன்றைக்கு என்னைக் குறித்த உம்முடைய சித்தம் என்ன என்று கேளுங்கள். இப்படிக் கேட்பதற்குக் கீழ்ப்படிதலும், அர்ப்பணிப்பும் அவசியம். ஆண்டவர் சொல்லுவதைச் செய்ய வேண்டும், அவர் வேண்டாம் என்பதை, அது உங்களுக்கு விருப்பமானதாய் காணப்பட்டால் கூட, விட்டுவிட வேண்டும். இயேசு கெத்செமனேயில் ஏறெடுத்த ஜெபம் அதற்கு ஒரு நல்ல உதாரணம், இந்த பாடுகளின் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானல் நீங்கும் படிக்குச் செய்யும், ஆகிலும் என்னுடைய  சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று பிதாவின் பூரண சித்தத்திற்கு விட்டுக் கொடுத்தார். அப்படிப்பட்ட சிந்தையோடு நீங்கள் கேட்கும் போது, ஆண்டவர் நீங்கள் செய்ய வேண்டியதையெல்லாம்  உங்களுக்குப் போதிப்பார்.  நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று வாக்குக் கொடுத்தவர், உங்கள் ஒவ்வொருவருக்கும் நடக்க வேண்டிய வழியையும், செய்ய வேண்டிய  காரியங்களையும் அனுதினமும் கற்றுத் தருவார். கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் என்று சங்கீதம் 119:1ல் எழுதியிருக்கிறபடி, நீங்கள் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, அவர் வழிகளில் நடக்கும் போது, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து பாக்கியவான்களாய், பாக்கியவதிகளாய் மாற்றுவார். நீங்கள் வாழ்ந்து சுகமாயிருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *