எஸ்றா 7 : 10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2Tk6f-LddTc
புதிய ஏற்பாட்டில் வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களைக் குறித்து அதிகமாக எழுதப்பட்டுள்ளது. நியாயப்பிரமாணத்தை வியாக்கியானம் செய்வதில் கைதேர்ந்தவர்கள் தான் வேதபாரகர்கள். அவற்றை கடைப்பிடிப்பதில் சிக்கனம் காட்டுபவர்கள் தான் பரிசேயர்கள். இவர்களின் தவறான விளக்கத்திற்கும், பழக்கத்திற்கும் எதிராக இயேசு இவர்கள் இரண்டு பேரையும் பார்த்து ‘உங்களுக்கு ஐயோ’ என்று கடிந்துகொண்டார். மாத்திரமல்ல, சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே, பிசாசின் பிள்ளைகளே என்றெல்லாம் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி கடிந்துகொண்டார். இருந்தாலும் பரிசேயர்கள் எல்லாரும் மோசம் என்று சொல்லிவிட முடியாது. அவர்களில் நிக்கெதேமு போன்ற நல்லவர்களும் இருந்தார்கள். அதுபோல வேதபாரகர்கள் எல்லாரும் மோசம் என்று சொல்லிவிட முடியாது. அவர்களில் எஸ்றா போன்ற சிறந்தவர்களும் இருந்தார்கள்.
எஸ்றா ஒரு நல்ல வேதபாரகன். இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவன் தன்னுடைய இருதயத்தை மூன்று காரியங்களுக்கு பக்குவப்படுத்தியிருந்தான். முதலாவது, வேதத்தை ஆராய தன்னுடைய இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் வேதத்தை ஆராய்ந்து படிக்கிறவர்களாக காணப்படவேண்டும். வேதத்தை படிக்க ஆரம்பிக்கும் முன், வேதாகமத்தின் ஆசிரியரான பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையை நாடுங்கள். வேதத்தின் மறைபொருளை அவர் ஒருவரே விளக்கிக்கூற முடியும். வேதாகமத்தை படிக்கும்போது இயேசு உங்களோடு பேசுகிறார் என்ற சிந்தனையோடு வாசியுங்கள். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரரைப் போல, வேதாகமத்தை மிகவும் வேகமாக வாசித்து முடிக்க வேண்டும் என்று ஓடாமல், பொறுமையோடு வாசியுங்கள், அப்பொழுது ஆவியானவர் உங்களோடு பேசும் சத்தத்தை கேட்பீர்கள்.
இரண்டாவது, அதின்படி செய்ய தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான். வேதத்தில் ஆண்டவர் கொடுக்கும் வாக்குத்தங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள உங்கள் இருதயம் நாடாமல், அவர் கடிந்துகொள்ளும்போதும், சரிப்படுத்தும்போதும், அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிய ஆயத்தமாய் இருங்கள். அவர் ஒரு காரியத்தை செய்யக்கூடாது என்று சொல்லும்போது, உங்களுக்கு பிரியமாக இருந்தாலும் அதை செய்ய முற்படாதீர்கள். அவர் வார்த்தைக்கு செவிகொடுத்து கீழ்ப்படிவது தான் உத்தமம்.
மூன்றாவதாக, இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும் அவன் தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான். நீங்கள் கற்றவைகளையும், செய்ததையும் மற்றவர்களுக்கு உபதேசியுங்கள். சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள் என்று பவுல் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டுதல் செய்யும்படி எபேசியர் 6:19, 20-ல் கூறுகிறான்.
ஆகையால், எஸ்றாவை போல உங்கள் இருதயத்தை கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், உபதேசிக்கவும் பக்குவப்படுத்துங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

