இழந்ததை மீட்டும் கட்டுங்கள் (Rebuild what was lost)

அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும்  லேவியருமன்றி, எவர்கள் ஆவியைத் தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். (எஸ்றா 1:5)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/q3rNS1mdUqI

கர்த்தர், நீங்கள் இழந்து போனதைத் திரும்பத் தருகிறவர், உங்கள் வாழ்க்கையில் சத்துருவினாலும், விரோதிகளாலும்  இடிக்கப்பட்டவற்றை  உங்களை வைத்தே திரும்பவும் கட்டச் செய்கிறவர். அவர் அவருடைய பிள்ளைகளை மறுபடியும், மறுபடியும் கட்டி வாழவைக்கிறவர்.  இஸ்ரவேல்  என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய், மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய் என்பது அவர் ஆவிக்குரிய  இஸ்ரவேலராகிய உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது.

யூதாவில் தோன்றின ராஜாக்களில், குறிப்பாய் கடைசியில் தோன்றின யோவாகாஸ், யோயாக்கீம், யோயாக்கின், சிதேக்கியா என்ற நான்கு ராஜாக்களின் பாவத்தின் நிமித்தம் கர்த்தர் அவர்களை  நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோனிய ராஜாவிடம் விற்றுப் போட்டார். அவன் எருசலேம் தேவாலயத்தை இடித்து தரைமட்டமாக்கி,  யூதாவின் குடிகளை சிறைப்பிடித்து  பாபிலோனுக்கு கொண்டுச் சென்றான். கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் வாக்கினால் உரைத்த எழுபது வருடங்கள் முடிந்த வேளையில் கர்த்தர் மீண்டும் அவர்களை  எருசலேமுக்கு திரும்பவும் கொண்டுவரத் தீர்மானித்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, சில வேளைகளில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அறிந்தும், அறியாமலும் செய்கிற பாவங்களின் நிமித்தம் வருகிற தடைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கர்த்தர் இரக்கமுள்ள தேவன், அவர் என்றைக்கும் கைவிடுகிற கர்த்தர் அல்ல.

கர்த்தர் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து அழைத்துக் கொண்டு வந்து ஆலயத்தைக் கட்டவும், ஆவிக்குரிய வாழ்வைக் கட்டவும்,  அலங்கத்தையும்  வாசல்களையும் கட்டவும் மூன்று தலைவர்களைத்   தெரிந்துகொண்டார்.  செருபாபேல், எஸ்றா, நெகேமியா என்ற அவர்கள் யூதாவின் குடிகளை மீண்டும் கட்டும்படிக்கு  கோரேஸ்  மற்றும் அர்தசஷ்டா ராஜாவின் நாட்களில், கர்த்தர் அவர்கள் கண்களில் தயவைக் கட்டளையிட்டதினால், சுமார் தொண்ணூற்று இரண்டு வருட வாக்கில்   எருசலேமுக்கு வந்தார்கள்.  செருபாபேல்  ஆலயத்தைக் கட்டி எழுப்பினான், ஆகையால் கர்த்தர் உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று வாக்குக் கொடுத்தார்.  அவனுக்குப் பின் சுமார் எண்பது வருடங்கள் கழிந்து எஸ்றா எருசலேமுக்கு வந்தான். அவன் புறஜாதிகளைத் திருமணம் செய்து பின்வாங்கிக் காணப்பட்ட யூத ஜனங்களை ஆவிக்குரிய வண்ணம் திரும்பவும் எடுத்துக் கட்டினான். உத்தம வேதபாரகனாகிய எஸ்றா, அதாவது உத்தம ஊழியன் என்று வேதம் அவனை அழைக்கிறது. அவனுக்கு பின் சுமார் பன்னிரண்டு வருடங்கள் கழிந்து நெகேமியா அலங்கத்தையும் வாசல்களையும்  கட்டும்படிக்கு  எருசலேமுக்கு வந்தான். அவன் ஐம்பத்திரண்டு நாட்களில் முயன்று நின்று அலங்கத்தையும் வாசல்களையும் கட்டி, யூத ஜனங்களுக்குப்  பாதுகாப்பையும், பொது அமைதியையும் உறுதி செய்தான். ஆகையால் அவன் விண்ணப்பத்தைக் கேட்டு அவனுக்கு  நன்மையுண்டாக கர்த்தர் அவனை நினைத்தருளினார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய காரியங்களுக்காக முயன்று நிற்கும் போது, கர்த்தர் உங்கள் வாழ்க்கையைக் கட்டுவார், நீங்கள் இழந்து போன ஆரோக்கியத்தையும், ஐசுவரியத்தையும், சமாதானத்தையும் திரும்பவும்   தந்து  உங்களை வாழ வைப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *