பிர 11:6 காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/CsoqmBLeWdo
நாட்கள் பொல்லாதவைகளாய் இருப்பதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஞானி கூறுகிறார். ஆத்தும ஆதாயம் செய்யும் அநேகர் எதிர்பார்க்கும் அறுவடை கிடைக்காமல் சிலவேளைகளில் சோர்ந்து போய்விடுகிறார்கள். ஆகையால் ஆத்துமாக்களைச் சந்திக்கப் போவதையே தவிர்த்துவிடுகிறார்கள். அப்படிச் செய்வதால் என்ன ஆகிறது என்று யோசித்துப் பாருங்கள். சோர்ந்து போய் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிடுவதால் ஒரு நபரையும் ரட்சிக்க முடியாமல் போய்விடுகிறது. அப்படி ஒருவரையும் இரட்சிப்பிற்கு ஏதுவாக நடத்தத் தவறுவதைப் பார்க்கிலும், ஒருவரை இரட்சிப்பிற்கு ஏதுவாக நடத்துவது பெரிய காரியமல்லவா! ஆத்துமாக்களைக் காலையிலும் பாருங்கள், மாலையிலும் பாருங்கள், எது வாய்க்கும் என்பதை நாம் அறியோம். ஆனால் ஒன்று நிச்சயம், ஏதோ ஒரு காரியம் வாய்க்கும் என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மனம் திரும்பிய நாளில் சுவிசேஷம் அறிவிப்பதில் தீவிரமாய் இருப்போம். பின்னாட்களில் அந்தத் தீவிரம் குறைந்து குளிர்ந்த நிலைக்குள்ளாகப் போய்விடுகிறது. மரணம் வரை அதில் தீவிரமாய் இருக்க வேண்டும் என்று தேவன் அழைக்கிறார். நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் என்று கர்த்தர் சிமிர்னா சபைக்குக் கூறுகிறார்.
விதை என்பது வசனம். வசனத்தை நாம் தாராளமாக விதைக்க வேண்டும். நிலம் எப்படி இருக்கிறதென்று பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள். வழி நிலம், பாறை போன்ற நிலம், முட்கள் இருக்கும் நிலம், நல்ல நிலம் என்று பார்க்காதீர்கள். விதையை காலையிலும் மாலையிலும் எவ்வேளையிலும் விதைத்துக்கொண்டே இருங்கள். எது வாய்க்கும் என்று நாம் அறியோம். ஆனால் வசனம் கூறுகிறது, ‘பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்’ (2 கொரி 9:6). சீஷர்கள் எங்கும் பிரசங்கித்தார்கள் என்று மாற்கு 16:20 கூறுகிறது.
வயல்நிலங்களில் காலம் தாழ்த்தி விதைத்தால் சரியான நேரத்தில் அறுவடை செய்ய முடியாது. அதுபோலத்தான் ஆத்துமாக்களின் இருதயத்தில் வசனம் என்னும் விதையை விதைக்கக் காலம் தாழ்த்தக்கூடாது. சமயம் வாய்தலும் வாய்க்காவிட்டாலும் திருவசனத்தைப் பிரசங்கியுங்கள். அப்பொழுது உங்கள் கையின் பிரயாசத்தை கர்த்தர் வாய்க்கப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

