எரே 9 : 1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/HmPNuk-gfx0
ஏசாயா தீர்க்கதரிசி மரித்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. சிறந்த ராஜாவாக இருந்த எசேக்கியாவைத் தொடர்ந்து அவரது பொல்லாத மகன் மனாசே ஆட்சி செய்த 40 ஆண்டு காலமாகத் தீர்க்கதரிசன சத்தம் தேசத்தில் தொனிக்கவில்லை .
அதன் பின்னர் மனாசேயின் ஆட்சிக்காலம் முடிவிற்கும், யோசியாவின் ஆட்சியின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நாகூம் எழும்பி தீர்க்கதரிசனம் உரைத்தார். அவரது ஊழியம் முடியும்போது, செப்பனியாவும், எரேமியாவும் அவர்களது ஊழியத்தைத் தொடங்கினர்; யோசியா, யோவாகாஸ், யோயாகீம், யோயாக்கீன் மற்றும் சிதேக்கியா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் (எரே 1:1-3) எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தார்.
எசேக்கியா ராஜாவுக்கு ஏசாயா இருந்ததைப்போல, யோசியா ராஜாவுக்கு எரேமியா இருந்தார். “ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்” என்று சொன்ன எரேமியாவின் வாயில் கர்த்தர் தமது வார்த்தையை அருளினார்.
அவர் ஒரு அழும் தீர்க்கதரிசி என்று அநேகர் சொல்லுவார்கள். அவ்வளவாய் மனவேதனையுடன் யூதாவின் ஜனங்களின் பின்மாற்றத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தார். இந்நாட்களில் தீர்க்கதரிசனம் உரைக்கும் அநேக தீர்க்கதரிசிகள், நீ நன்றாயிருப்பாய், நீ வாழ்ந்திருப்பாய், நீ சுகித்திருப்பாய் என்றே தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். அது உண்மையிலேயே தேவனிடத்திலிருந்து வரும் தீர்க்கதரிசனம் தானா? இல்லை அவர்கள் உண்மையாகவே கர்த்தரின் வாயாக இருக்கிறார்களா என்பதே பல வேளைகளில் கேள்விக்குறியாக காணப்படுகிறது.
கவிழ்க்கப்பட்ட எருசலேம் நகரைப் பார்த்து எரேமியா அழுது புலம்பினார். பின்னாட்களில் அதே எருசலேம் நகரைப் பார்த்து இயேசு கண்ணீர் விட்டு அழுதார். “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” (மத் 23:37) என்று இயேசு கூறினார். இந்நாட்களில் தீர்க்கதரிசிகள் மாத்திரமல்ல, தேவ ஜனங்கள் ஒவ்வொருவரும் பின்மாற்றத்திலிருக்கும் நம்முடைய ஜனங்களுக்காக, சமுதாயத்திற்காக, குடும்பங்களுக்காக, தேசத்திற்காக எரேமியாவைப் போல, இயேசுவைப் போல அழுது ஜெபிக்கிறவர்களாய் நாம் காணப்படுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

