கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருங்கள் (Trust in the Lord)

நீதி 22 : 19 . உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/h135x5i_40E

சாலொமோன் ஞானி கொடுக்கும் மிக முக்கியமான அறிவுரை: கர்த்தர்மேல் நம்பிக்கை வையுங்கள் என்பதே. எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழல்களிலும், எந்தவொரு நிலையிலும், என்ன நடந்தாலும், கர்த்தர்மேல் நம்பிக்கை வையுங்கள். உலகத்தில் அநேகர் அநேக விதமான குறிக்கோள்களைக் கொண்டிருப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய குறிக்கோள், வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருக்க வேண்டிய வார்த்தை, ‘கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருங்கள்’ என்பதே. இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் உடன் வைத்துக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ள உலகில் என்ன நடந்தாலும், கர்த்தர்மேல் நம்பிக்கை வையுங்கள். அவரே உங்களைக் காத்து வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து செல்ல வைப்பார். அவரே உங்களை உயர்த்துவார். அவரே உங்களை நிலைநிறுத்துவார். காரியங்கள் கடினமாக இருக்கும்போதும், சாத்தியமற்றதாகத் தோன்றும்போதும், கர்த்தர்மேல் நம்பிக்கை வையுங்கள்.

ஒருவர் கடந்த காலத்தில் சொன்னவை உண்மையாக இருந்ததை நாம் காணும்போது, அவர் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. அதுபோலத்தான், கர்த்தர் உங்களை இம்மட்டும் எபிநேசராக வழிநடத்தியதை எண்ணிப் பாருங்கள். எத்தனையோ இக்கட்டான பாதைகளில் உங்கள் கூட இருந்து நடத்தியவர், இனிமேலும் உங்களை நடத்தப் போதுமானவர் என்பதை விசுவாசியுங்கள்.

ஒரு நல்ல காரியம் உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த பிறகு கர்த்தர் மீது நம்பிக்கை கொள்வதற்கும், நல்ல காரியம் நடப்பதற்கு முன்பாக ‘என் தேவன் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்’ என்று கர்த்தர் மீது நம்பிக்கையாய் இருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. உங்கள் சூழ்நிலை அல்லது நீங்கள் கடந்து செல்லுகிற பாதை கடினமாக இருக்கும்போது, கர்த்தர்மேல் உங்கள் பாரத்தைப் வைத்துவிட்டு , அவர் மேல் நம்பிக்கையாய் இருங்கள். கர்த்தரை நம்புபவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை. ரோமர் 5:5 கூறுகிறது: ‘மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.’ என்பதாக. உலகத்தில் மூட நம்பிக்கை என்று சொல்லப்படுகிற அநேக காரியங்களை கோடிக்கணக்கான ஜனங்கள் நம்புகிறார்கள். ஆனால் அவைகள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாது. ஆனால் உங்கள் கைகளில் உள்ள வேதபுத்தகம் பொக்கிஷங்களிலெல்லாம் பொக்கிஷம். அதில் ஆவியானவர் எழுதிவைத்திருப்பதை முழுநிச்சயமாய் நம்புங்கள். கர்த்தரை நம்புவது என்பது, அவருடைய வார்த்தையை நம்புவதாகும். உங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அவர் வார்த்தையை நம்புங்கள். தானியேலின் மூன்று நண்பர்கள் எரிகிற அக்கினிச் சூளைக்கும் ராஜாவுக்கும் பயப்படவில்லை; அவர்கள் கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருந்தார்கள். கர்த்தர் அவர்களை விடுவித்தார். அதுபோல கர்த்தரை நம்புகிறவர்களைக் கிருபை சூழ்ந்துகொள்ளும்; அவர் உங்களுக்கு அடைக்கலமாகவும், கோட்டையாகவும் இருந்து உங்கள் வாழ்வின் எல்லா காரியங்களிலும் ஆலோசனை தந்து வழிநடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *