நீ பயப்படாதே.

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார் (ஆதி. 15:1).

தேவாதி தேவன் முதல் முதலாக ஒரு மனுஷனைப் பார்த்துப் பயப்படாதே என்று கூறிய இடம் மேற்குறிப்பிட்ட வசனமாய் காணப்படுகிறது.  ஆபிரகாமைப் பார்த்து நீ பயப்படாதே என்று கூறினவர் உங்களைப் பார்த்தும் பயப்படாதிருங்கள் என்று கூறுகிறார். ஆபிரகாம் தன்னுடைய எதிர்காலத்தைக் குறித்து, பிள்ளையில்லாமல் இருக்கிறேன் என்பதைக் குறித்துக் கலங்கி நின்ற வேளையில் கர்த்தர் அவனைப் பார்த்து பயப்படாதே என்று கூறினார். நம்மைச் சுற்றிலும் அனேக காரியங்கள் நடந்துகொண்டிருக்கிறது. பலவிதமான வியாதிகளினாலும் தொற்று நோய்களினாலும் ஜனங்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். யுத்தங்களின் செய்திகள் அனேக தேசங்களில் தொனித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய தேவைகள் சந்திக்கப்படாதினால் மனக்கலக்கங்கள் காணப்படுகிறது. அக்கிரமங்களின் மிகுதியினால் அனேகருடைய அன்பு தணிந்து காணப்படுகிறது.  ஆவிக்குரிய காரியங்களில் கூட கலக்கங்களை உண்டாக்குகிற சம்பவங்கள் நடக்கிறது, கள்ள உபதேசங்களும் தீர்க்கத்தரிசனங்களும் பெருகிக் காணப்படுகிறது, மணவாட்டி சபை கறைபட்டுப் போனவளாய் காணப்படுகிறாள், உண்மையில்லா ஊழியக்காரர்கள் திரளாய் பெருகிக் காணப்படுகிறார்கள், பணத்திற்கு முன்பு மண்டியிடுகிற திரளான ஊழியர்களின் கூட்டம் உண்டு, அஸ்திபாரங்கள் கூட நிர்மூலமாகிற நாட்கள் இந்நாட்களாய் காணப்படுகிறது. இவையெல்லாம் கர்த்தருக்குப் பயந்தவர்களின் இருதயத்தில் ஒருவித பயத்தையும் கலக்கத்தையும் கொண்டு வருகிறது. ஆனால் ஆபிரகாமின் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதிருங்கள் என்று கூறுகிறார். கலங்கி நின்ற ஆபிரகாமை வெளியே அழைத்து வந்து நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி. 15:5-6). கர்த்தர் பேரில் நாம் வைக்கிற விசுவாசம் நம்முடைய எல்லாவித பயங்களையும் நம்மை விட்டு அகற்றும்.  ஒருவிசை இயேசுவும் சீஷர்களும் படவில் சென்றுகொண்டிருந்தார்கள், இயேசு நித்திரையாயிருந்தார். அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவருடைய சீஷர்கள் வந்து, இயேசுவை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும்  கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று (மத். 8:23-26). இயேசு நம்முடைய வாழ்க்கை படகில் காணப்படும் போது, நம்முடைய அற்பவிசுவாசத்தையும், அவ்விசுவாசத்தையும் நம்மை விட்டு அகற்றும் போது, சூழ்நிலைகள் எதுவாய் இருந்தாலும் நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.

ஆபிரகாமைப் பார்த்து பயப்படாதே என்று சொன்னவர், நான் உன்னுடைய கேடகமாயிருக்கிறேன் என்றும் வாக்களித்தார். ஆதியாகமம் 14-வது அதிகாரத்தில் தன் சகோதரன் சிறையாகக்கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலையும், தாண் என்னும் ஊர்மட்டும் தொடர்ந்துபோய், இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்தான் (ஆதி. 14:14-15). ஒருவேளை அவர்கள் திரும்பத் தாக்கக்கூடும் என்ற கலக்கம் கூட ஆபிரகாமிற்கு இருந்திருக்கக் கூடும். ஆகையால் தான் ஆபிரகாமைப் பார்த்து ஆண்டவர் சொன்னார், நான் உன்னுடைய பாதுகாப்பாக இருக்கிறேன். இந்நாட்களில் பல உலக நாடுகள் தங்களைச் சுற்றிலும் கேடகங்களை (missile shield) பாதுகாப்பிற்காக அமைப்பது உண்டு.  ஏவுகணைத் தாக்குதலைத் தடுப்பதற்குப் பாதுகாப்பு வளையங்களை வைப்பது உண்டு. ஆனால் அவைகள் எல்லாவற்றைக் காட்டிலும் கர்த்தருடைய பாதுகாப்பு மாத்திரமே எத்தீங்கும் உங்களை அணுகாமல் பாதுகாக்கும். உங்களைப் பாதுகாக்கிற தேவன் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. உன்னதமானவரின் மறைவே உங்களுடைய மிகுந்த பாதுகாப்பு. ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம் எல்லாத் தீங்கிற்கும் உங்களை விலக்கிப் பாதுகாக்கும்.

 ஆபிரகாமைப் பார்த்து மீண்டும் தேவன் சொன்னார், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். ஆபிரகாமின் பயத்தை நீக்கி, பாதுகாப்பேன் என்று வாக்களித்தவர், உன்னை ஆசீர்வதிப்பேன், உனக்கு மகா பெரிய பலனைத்தருவேன் என்றும் வாக்களித்தார். ஆபிரகாமின் கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிக்கிறவர். ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் அத்தனைக்கும் கிறிஸ்துவின் மூலம் நீங்கள் சுதந்தரவாளிகளாய் காணப்படுகிறீர்கள். ஆபிரகாம் எதிரிகளை வீழ்த்தி, சகல பொருள்களையும் தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.  அவன் கெதர்லாகோமோரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான். சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.  அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஜசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு, நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,  வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன் (ஆதி. 14: 16-23). ஆபிரகாம் சோதோமின் பொருட்கள் மேல் தன் கண்களை வைக்கவில்லை, சோதோமின் ராஜாவின் நன்மைகளையும் அவன் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய கண்கள் கர்த்தர் பேரிலிருந்தது, அவருக்கு நேராகக் கையை உயர்த்துகிறவனாய் காணப்பட்டான், அவருடைய ஆசீர்வாதங்களையே விரும்பினான். ஆகையால், உலகப் பொருட்களை இச்சியாத தன்னுடைய தாசனைப் பார்த்து, தேவன் சொன்னார் நான் உன்னுடைய ஆசீர்வாதமாயிருக்கிறேன், உன்னுடைய மகா பெரிய பலனாயிருக்கிறேன் என்று வாக்களித்தார். தேவனையும், தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளையும் நாம் தேடும் போது கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார். வேதனையில்லாத ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் தருவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *