நாவு ஒரு நெருப்பு (The tongue is a fire.)

யாக் 3 : 6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/a_kKRnSZi48

நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நாவு மற்றவர்களை கட்டவும் உதவும், மற்றவர்களை இடித்தும் தள்ளும். யாக்கோபு நாவை ஒரு நெருப்புக்கு அடையாளமாகவும் கூறுகிறார். நெருப்பிற்குள் யாரும் கையை விடுவதில்லை. விட்டால் அது அவர்களை சுட்டுவிடும். அதுபோலதான் பட்டயத்தைப் போல பேசுபவர்களின் அருகே செல்வதற்கு யாரும் விருப்பமுடையவர்களாய் இருப்பதில்லை.

அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்திவிடும் என்று யாக்கோபு திட்டமும் தெளிவுமாக கூறுகிறார். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும் என மத் 6 : 22 ல் இயேசு கூறினார். அதுபோல யாக்கோபு நம்மிலிருக்கும் நாவு முழுச்சரீரத்தையும் கறைப்படுத்திவிடும் என்று கூறுகிறார். வாயிலிருந்து வரும் தகாத வார்த்தைகள், இச்சைகள் நிறைந்த வார்த்தைகள், மாம்சீக வார்த்தைகள் வருமென்றால், உங்கள் சரீரம் முழுவதும் பழுதடைந்ததாய் போய்விடும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

மாத்திரமல்ல, நெருப்பைப் போல இருக்கும் நாவானது ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடும். நமக்கு வரும் வியாதிகள், பெலவீனங்கள் மாத்திரம் ஆயுள் சக்கரத்தை குறைத்துவிடும் என்று அநேகர் தப்பான எண்ணம் கொள்ளுகிறார்கள். இந்த குறிப்பிட்ட சத்தியத்தை கர்த்தருடைய ஜனங்கள் விளங்கிக்கொண்டால் கர்த்தர் நியமித்திருக்கும் நாள் வரைக்கும் தடையின்றி ஜீவனம் செய்ய முடியும். கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்று ஆண்டவர் ஒரு கட்டளையைக் கொடுத்தார். நாட்கள் நீடித்திருப்பதற்கு தகப்பனையும் தாயையும் கனம்பண்ண வேண்டும். அதுபோல, உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்க, நாவை சரியாக உபயோகப்படுத்த வேண்டும்.

நெருப்புபோல இருக்கும் நாவானது, நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது என்று வசனம் கூறுகிறது. திருவள்ளுவர் சொன்னார், தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்பதாக. தீயினால் சுட்ட புண் ஆறிப்போனாலும், ஒருவர் பேசும் பொல்லாத வார்த்தை எத்தனை வருடமானாலும் அது ஆறுவதில்லை. அக்கினியில் கொளுத்தப்படுகிற வார்த்தையைப் போன்ற சொற்கள் உங்கள் நாவிலிருந்து வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது. நாவை மரணத்திற்கு விலக்கி ஜீவனுக்கேற்ற விதத்தில் பழக்குவியுங்கள். நீங்கள் பேசும் வார்த்தையே உங்களை நியாயம் தீர்க்கும் என்பதை அறிந்து, கிருபையுள்ள வார்த்தைகளை பேசுங்கள், சத்தியத்தை பேசுங்கள், விசுவாசத்தை பேசுங்கள், தேவன் எழுதிக்கொடுத்த வாக்குத்தத்தை பேசுங்கள். நீங்கள் அறிக்கையிடும் வாக்குத்தத்தம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *