ஏன் சபை? சபை கிறிஸ்துவின் மணவாட்டி (Why Church? – The Church is the Bride of Christ)

பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் (வெளி. 21:9)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/quf6ktCc-Hs

வேதாகமத்தில் உள்ள திருமண வழக்கங்களை நாம் புரிந்து கொள்ளும் போதுதான் கிறிஸ்துவிலுள்ள நமது இரட்சிப்பு, கன்னிகையைப் போன்ற பரிசுத்த வாழ்வு, மணவாட்டி என்ற நிலையிலிருந்து மனைவி என்ற நிலைக்குச் செல்லுவதை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும். ஆதாமுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தும் படிக்கு அவனுக்கு அயர்ந்த  நித்திரையைத் தேவன் கட்டளையிட்டார். அவனுடைய விலா எலும்பை  எடுத்து ஏவாளை மணவாட்டியாய் சிருஷ்டித்து அவனுக்கு முன் நிறுத்தினார். அதுபோல மணவாளனாகிய இயேசு நம்மை அவருக்கு மணவாட்டியாய்  மாற்றுவதற்குச் சிலுவையில் ஜீவனைக் கொடுத்தார். அந்த வேளையில்  போர்சேவர்கள் ஈட்டியினால் விலாவைப் பிளக்க இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வந்தது. இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் மீட்கப்பட்ட, இரட்சிக்கப்பட்டவர்களாய் மணவாட்டி சபையின் உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். அதன்பின்பு, வேறுபாட்டின் ஜீவியம் செய்து, உலகத்தின் வழக்கங்களைக் கற்றுக்கொள்ளாதபடி, இப்பிரபஞ்சத்திற்குரிய வேஷத்தைத்  தரிக்காதபடி, பரிசுத்த ஜீவியம் செய்ய வேண்டும். ஆகையால்தான், அப்போஸ்தலனாகிய பவுல், நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க  நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவ வைராக்கியமான  வைராக்கியங்கொண்டிருக்கிறேன்  என்று 2 கொரி. 11:2ல் கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, பரிசுத்த வாழ்வு வாழ உங்களை அர்ப்பணியுங்கள். உங்கள் கண்கள் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் தெளிவாயிருக்கும், கண்கள் சரீரத்தின் விளக்காயிருக்கிறது. ஆகையால் உங்கள்  கண்களுக்குக் காவல் வையுங்கள், இருதயச் சிந்தைகளைக் காத்துக் கொள்ளுங்கள். மணவாளனுடைய வருகையை எதிர்நோக்கிக் காணப்படுங்கள். ஆதி சபையின் நாட்களில் அப்போஸ்தலர்கள் மணவாளனுடைய வருகையை எதிர்நோக்கி, மாரநாதா கர்த்தர் வருகிறார் என்று காத்துக் கொண்டிருந்ததைப் போல, இயேசுவின் வருகையை எதிர்நோக்கி வாழுங்கள்.

வேறுபாட்டின் ஜீவியம் செய்கிறவர்களைச் சேர்த்துக் கொள்ளும் படிக்கு மணவாளனாகிய இயேசு துரிதமாய் வரப்போகிறார்.   புத்தியுள்ள கன்னிகைகளைப் போலத் தங்களை ஆயத்படுத்திக் கொண்டு காணப்படுகிறவர்களைச் சேர்த்துக் கொள்ளும் படிக்கு மத்திய வானில் வரப்போகிறார். ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்,  பிரதானத் தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள், பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம் என்று 1 தெச. 4:16,17ல் எழுதப்பட்டிருக்கிறது. அப்பொழுது, சபை மணவாட்டி என்ற நிலையிலிருந்து மனைவி என்ற நிலைக்கு நேராகக் கடந்து  செல்லும். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள்  என்று வெளி. 19:7 கூறுகிறது. இவ்வண்ணமாய் நாம் என்றென்றைக்கும் மணவாளனாகிய இயேசுவோடு இருப்போம். கர்த்தர் கிருபையாய் கொடுத்திருக்கிற பூமிக்குரிய இந்த வாழ்வு, அந்த மகிமையான வாழ்வின் ஆயத்தத்திற்காய் என்பதைப் புரிந்துகொண்டு, நம்மைப் பரிசுத்தப்படுத்தி முழுவதுமாய் அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae