பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள் (தானி. 12:2).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_sAwO_jZHI0
தேவன் மனுஷனை மண்ணினால் சிருஷ்டித்தார். ஆதாம் என்றால் செம்மண் என்று அர்த்தம். ஆதாம் பாவம் செய்த பின்பு, கர்த்தர் அவனை நோக்கி, நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய் நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார் என்று ஆதி. 3:19 கூறுகிறது. தேவ ஞானத்தினால் நிறைந்த சாலொமோன் ஞானி எழுதின பிரசங்கி புத்தகத்திலும், இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை என்று எழுதினார். அப்போஸ்தலனாகிய பவுலும், முந்தின மனுஷனாகிய ஆதாம் பூமியிலிருந்துண்டான மண்ணானவன் என்று 1 கொரி. 15:48ல் எழுதினார். கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் எல்லாரும் பூமியின் தூளிலிருந்து எடுக்கப்பட்டவர்கள் என்பதையும், நம்முடைய உருவம் இன்னதென்று கர்த்தர் அறிவார் நம்மை மண்ணென்று நினைவுகூருகிறார் என்பதையும் மறந்துவிடாதிருங்கள். அனேக வேளைகளில் மண்ணுக்குக் கொடுக்கிற முக்கியத்தைக் கூட, அதைச் சிருஷ்டித்த சிருஷ்டிகருக்கு நாம் கொடுப்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
வேதத்தில் மரணம் என்பது நித்திரைக்கு ஒப்பாகக் காணப்படுகிறது. மரணம் எந்த ஒரு மனுஷனுடைய முடிவும் அல்ல. அது ஒரு நீண்ட நித்திரைக்கு ஒப்பானது. ஒருநாள் கர்த்தருடைய வருகையின் வேளையில் எக்காளச் சத்தம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எல்லாரும் உயிரோடு எழும்பி நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள். ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானத் தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் என்று 1 தெச. 4:16 கூறுகிறது. அதுபோல, தீமை செய்தவர்கள் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் நேராய் ஆக்கினையை அடையும்படி எழுந்திருப்பார்கள் என்று 1 யோவான் 5:29 கூறுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நமக்கு முன்பாகக் கடைசியில் சேரும் இடமாக இரண்டே இடங்கள்தான் காணப்படுகிறது. ஒன்று நித்தியப் பரலோகம், இன்னொன்று நித்திய நகரம். பூமிக்குரிய உங்கள் வாழ்க்கையில் எதை அடையவேண்டும் என்ற இலக்கோடு வாழ்கிறீர்களோ, அதைப் பொறுத்துத்தான் நீங்கள் சேருமிடமும் காணப்படும். ஆகையால் நீதிக்குரிய ஜீவியம் செய்வதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். மனந்திரும்பி, மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுத்து, கிறிஸ்துவின் சாயலை அணிந்து, மற்றவர்கள் இயேசுவை உங்களில் வாசித்து அறிகிற நிருபங்களாய் வாழ்ந்து, அவருடைய வாசனையை வீசுங்கள். அப்பொழுது மகிமையான முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

