எப்பிராயீம் அந்நிய ஜனங்களோடே கலந்திருக்கிறான், எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம், அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள், அவனோ அதை அறியான், நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான். (ஓசியா 7:8,9).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6BSn7akEgfA
கிறிஸ்துவுக்கு முன்பு எட்டாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்த ஓசியாவும், ஏசாயாவும் சமகால தீர்க்கதரிசிகள். இவர்களுக்குள் காணப்படுகிற முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் ஓசியா இஸ்ரவேல் தேசத்தின் வடபகுதியில் காணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னான், ஏசாயா தென்பகுதியில் வாழ்ந்த யூதா கோத்திரத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னான். மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தில் எப்பிராயீம் என்பது வடபகுதியில் காணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை, அதாவது பத்துக் கோத்திரங்களை மொத்தமாய்க் குறிப்பிடுகிறதே ஒழிய, யோசேப்பின் குமாரனாகிய எப்பிராயீமைக் குறிக்கிறதாய் நினைத்து விடாதிருங்கள். முன்னாட்களில் தட்டையான கேக்குகள், அல்லது ரொட்டிகள் கற்களின் மீது சுடப்பட்டன, அவைகள் சீராக வேகவேண்டும் என்றால் அவ்வப்போது திருப்பிப் போட வேண்டும், இல்லையேல் ஒருபுறம் வெந்து கருகிப்போய்விடும், மறுபுறம் வேகாமல் பச்சை மாவாகக் காணப்பட்டு உபயோகமற்றதாய் மாறிவிடும். இஸ்ரவேல் திருப்பிப் போடாத அப்பம் என்று ஆண்டவர் குறிப்பிட்டதின் காரியம், அவர்கள் அந்நிய ஜனங்களோடே கலந்திருந்தார்கள், அந்நியர் அவர்களுடைய பலத்தைத் தின்றார்கள், பேதையான புறாவைப்போல் இருந்தார்கள், அவர்களுக்குப் புத்தியில்லை, தேவனைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக எகிப்தியனையும் அசீரியனையும் சார்ந்திருந்தார்கள் என்று அச்சூழலில் எழுதப்பட்ட வசனங்கள் குறிப்பிடுகிறது. ஆகையால் அவர்கள் தேவனை அறிந்திருந்தும், திருப்பிப் போடாத அப்பமாய் ஒருபுறம் வெந்து காணப்பட்டதினால், தேவனுக்கு பிரயோஜனமற்றவர்களாக மாறிவிட்டார்கள். நரைமயிரும் தெளித்திருக்கிறது என்பது, முதியவர்களைப் போல நரைத்திருந்தாலும் இன்னும் இளைஞனைப் போல நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக உணர்வில்லாமல் வாழ்ந்தார்கள் என்பதைக் குறிக்கிறது..
கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருநாளும் அரைவேக்காட்டுக் கிறிஸ்தவர்களாய் காணப்படாதிருங்கள். மாய்மாலம் பண்ணுகிறவர்களாகவும், பூரணச் சமர்ப்பணம் இல்லாதவர்களாகவும் காணப்படாதிருங்கள். சபையில் ஒரு சாயலையும் உலகத்தில் இன்னொரு சாயலையும் வெளிப்படுத்தாதிருங்கள். பலபீடத்தில் பரிசுத்தவானாகவும், உத்தமனாகவும், சபைக்கு வெளியே பண ஆசை, பொருளாசை பிடித்தவர்களாகவும் காணப்படாதிருங்கள். திருப்பிப் போடாத அப்பம் யாருக்கும் பிரயோஜமில்லாமல் இருக்கிறதைப் போல, பிளவுபட்ட, இருநினைவுகளினால் குந்திக் குந்தி நடக்கிற, அனலுமில்லாமல் குளிருமில்லாமல் காணப்படுகிறவர்களால், தேவனுடைய ராஜ்யத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அப்படிப்பட்டவர்களால் புறஜாதிகள் நடுவில் ஆவிக்குரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதை உணராமல் காணப்படுகிற விசுவாசிகளினாலும், ஊழியர்களினாலும் தேவ நாமம் இந்நாட்களில் தூசிக்கப்படுகிறது. ஆண்டவரே என்னை உள்ளும் புறம்பும் உம் நேச அக்கினியினால் சுட்டு, இருபுறமும் சுடப்பட்ட அப்பமாக்கி, என்னைப் பிட்டு, உமக்காக பயன்படுத்தும் என்பது நம்முடைய ஜெபங்களாய் காணட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

