உயிருள்ள நிருபங்கள் (Living Epistles)

எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே (2 கொரி. 3:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cEdA2s4nViU

அப்போஸ்தலர்களுடைய நாட்களில் உபசார நிருபங்கள், அதாவது பரிந்துரைக் கடிதங்களைக் கொடுத்து புதிய ஊழியர்களைச் சபைகளுக்கு அனுப்புவது வழக்கமாகவும்,  அவசியமாகவும் காணப்பட்டது. ஒரு போலித் தீர்க்கதரிசியோ அல்லது அப்போஸ்தலரோ ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்று, பவுல் என்னை அனுப்பினார், எனவே நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எளிதாகக் கூறி ஏமாற்றக்கூடும். இத்தகைய நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கும் விதமாகப் பயணம் செய்யும் போது அவர்களுடன் பெரும்பாலும் பரிந்துரை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கெங்கிரேயா ஊர்ச் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன், அவள் அநேகருக்கும் எனக்குக்கூட ஆதரவாயிருந்தவள் என்று ரோமாபுரியில் காணப்பட்ட சபை விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதை ரோமர் 16:1,2 மூலம் அறியமுடிகிறது. 

பரிந்துரைக் கடிதங்களைக் காகிதங்களில் எழுதி அனுப்புவது ஒன்று, இன்னொன்று பவுல் ஊழியம் செய்த இடங்களில் காணப்படுகிற விசுவாசிகள் உயிருள்ள நிருபங்களாய் மற்றவர்களால் வாசித்து, கிறிஸ்துவை அறியக்கூடிய உயிருள்ள சாட்சிகளாய் வாழ்ந்து காட்டுவதாய்க் காணப்படுகிறது. முதலில் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு நீங்கள் எங்கள் நிருபங்களாயிருக்கிறீர்கள் என்று எழுதிய அப்போஸ்தலனாகிய பவுல், பின்பு நீங்கள் கிறிஸ்துவின் நிருபங்களாயிருக்கிறீர்கள் என்று எழுதினான். அதாவது நீங்கள் கிறிஸ்துவின் நிருபங்களாய்க் காணப்படுவதற்கு அவர் என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தினார் என்று கூறுவதைப் பார்க்கமுடிகிறது.

ஒவ்வொரு ஊழியர்கள் மற்றும் ஊழியங்களின் உண்மையான சான்று என்பது, உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றமும், நீங்கள் மிகுந்த சுவையான கனி கொடுப்பதிலும்,      உயிருள்ள நிருபங்களாய் மற்றவர்களுக்கு முன்பு வேறுபாட்டின் ஜீவியம் செய்வதிலும், சாட்சியாய் வாழ்வதிலும் காணப்படுகிறது. ஆகையால் நீங்கள் செல்லுகிற இடங்களிலெல்லாம் கிறிஸ்துவின் வாசனையை வீசுங்கள். உலகத்தின் வழிகளைக் கற்றுக் கொள்ளாதிருங்கள், இப்பிரபஞ்சத்திற்குரிய வேஷத்தைத் தரித்து விடாதிருங்கள். ஒரு காலத்தில் வேதக்காரர்கள் என்று சொன்னால் புறஜாதிகள் அவர்களை ஒழுக்கமானவர்கள், யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள் என்று நம்பினார்கள், ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது. அரசு அலுவலகங்களில் கறைபடிந்த அதிகாரிகளில் கிறிஸ்தவர்கள் காணப்படுகிறார்கள், முறைகேடாய் பணம் சம்பாதிப்பதிலும், கொள்ளையடிப்பதிலும் அனேகர் காணப்படுகிறார்கள். போதைப் பொருள்கள் பயன்படுத்துவது மற்றும் மதுபான வெறியர்களாய் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவின் நற்கந்தத்தை வீசுவதற்குப் பதிலாக துர்க்கந்தத்தைப் புறஜாதிகள் நடுவில் வீசுகிறார்கள், இவர்கள் மூலம் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமம் தூசிக்கப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவின் உயிருள்ள நிருபங்களாய்   உங்களை அர்ப்பணித்து வாழும் போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, கனப்படுத்தி, உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae