எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் (Peace of God that surpasses all our understanding)

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.  அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி. 4:6,7)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ztnLSPpEwGM

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமியில், இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில்தான்,  தேவ சமாதானம்   நிறைவாகக் காணப்படும். அப்பொழுது பூமி முழுவதும் கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்து காணப்படும். அதுவரைக்கும் கர்த்தருடைய ஜனங்கள் யுத்தங்கள், இயற்கைச் சீற்றங்கள், இனம், மொழி, மதக் கலவரங்கள் இவை நடுவில்தான் வாழவேண்டும். இவற்றின் நடுவில் சமாதானத்தோடு வாழ முடியுமா என்ற கேள்வி உங்களுக்குள் எழும்பக்கூடும். சமாதானப் பிரபுவாகிய இயேசுவை உங்கள் வாழ்க்கையின் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவரை மையமாக வைத்து வாழும்போது எல்லாச் சூழ்நிலைகளிலும் சமாதானமாகக் காணப்பட முடியும். அவருடைய பெயர்களில் ஒன்று சாலேமின ராஜா என்பது, அவர் சமாதானத்தின் ராஜாவாய்க் காணப்படுகிறார். நமக்குச் சமாதானத்தை தரும்படிக்கு நம்மேல் வரவேண்டிய ஆக்கினைகளையும், தண்டனைகளையும் சிலுவையில்  தன்மேல் ஏற்றுக் கொண்டார். சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக என்று யோவான் 14:27ல் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கவலைப்பட்டுக் கலங்குவதினால் ஒன்றும் ஆவதில்லை. ஆகையால் உங்கள் கஷ்டங்கள், பாடுகள், குறைகள், வியாதிகள், தேவைகள், நெருக்கங்கள் எல்லாவற்றையும் ஆண்டவருக்குத் தெரியப்படுத்தி விடுங்கள். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். ஜார்ஜ் முல்லர் என்ற தேவமதனிதன் இங்கிலாந்து தேசத்தில் பதினாயிரம் அனாதைப் பிள்ளைகளைப் பதினெட்டாம் நூற்றாண்டில் பராமரித்தவர். அவர் ஒரு விசுவாச வீரர் மற்றும் ஜெப வீரர். ஒருமுறை பிள்ளைகளுக்குக் காலை உணவு கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பிள்ளைகளை பந்தியிருக்கும் படிக்குச் செய்து விட்டு அவர் ஜெபித்துக் கொண்டிருந்தார்.  அப்பொழுது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்த வேளையில் அப்பகுதியைச் சேர்ந்த ரொட்டி தயாரிக்கிறவர், தேவ தூண்டுதலின்படி,   புதிய ரொட்டிகளைத் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தார். அதற்குச் சற்று நேரத்திற்குப் பிறகு கதவில் இரண்டாவது முறையாகத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்த வேளையில் பால் விற்பனையாளர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய வண்டி இவர்களுடைய வீட்டிற்கு முன்பாகவே சக்கரம் உடைந்து பழுதடைந்துவிட்டது. சரிசெய்வதற்கு நீண்ட நேரம் ஆகும், ஆகையால் பாலை எடுத்துக்கொள்ளுங்கள்  என்று வேண்டினார். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் காரியங்களைக் கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார். ஆகையால் அவருக்கு ஜெபத்திலே தெரியப்படுத்தி விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, கர்த்தர் உங்கள் காரியங்களைப் பார்த்துக் கொள்ளுவது மாத்திரமல்ல, எல்லாப் புத்திக்கு மேலான தேவ சமாதானம், அதாவது நீங்கள் புரிந்து கொள்ளவோ, விளக்கவோ கூடாத அளவிற்கு தேவ சமாதானத்தை உங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பீர்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae