பரிசுத்த நகரம் (The Holy City )

வெளி 21 : 2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/j_StkHlFEUU

புதிய எருசலேம் பரிசுத்த நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு நேர்மாறாக பாபிலோன் நகரம் மகா நகரம் என்று அழைக்கப்படுகிறது. இன்று அநேகர் மகா நகரம் அதாவது பெரிய பெரிய மாநகரங்களில் குடியிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் இன்னும் இது போன்ற மாநகரங்களில் குடியேற வேண்டும் என்ற வாஞ்சை இருக்கிறது. இன்னும் சிலர் வெளிநாடுகளில் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருக்கும் பெரிய மாநகரங்களில் சென்று குடியேற வேண்டும் என்ற வாஞ்சையில் பிரயாசப்படுகிறவர்களும் உண்டு. இந்த குறிப்பிட்ட நகரத்தில் மதுபானம், போதைப்பொருட்கள், விபச்சார வேசித்தன விடுதிகள் இல்லை; இங்கே இருந்தால், நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றெண்ணி எத்தனை பேர் தான் நல்ல நகரத்தை வாஞ்சிக்கிறார்கள்?

எப்படியோ இந்த உலகத்தில் பரிசுத்த நகரம் என்று ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது. நாம் இந்த உலகத்தில் ஓட்டத்தை முடித்து வாழப்போகும் நகரம் புதிய எருசலேம், அது பரிசுத்த நகரம். பழைய ஏற்பாட்டில், தேவனுடைய ஆலயம் அமைந்திருந்த இடம் இதுவே. தேவனுடைய வாசஸ்தலமான எருசலேம், மோசேயால் கட்டப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து உருவானது (யாத் 25:8). இந்த ஆசரிப்புக் கூடாரம், கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம், அதாவது தேவனுடைய திட்டத்தின்படி துல்லியமாகக் கட்டப்பட்டது. இது தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்களால் கட்டப்பட்டது. பெசலெயேலை தேவனுடைய ஆவியினால் கர்த்தர் நிரப்பியிருந்தார். இது தேவனுடைய மகிமைக்காகக் கட்டப்பட்டது. கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தை நிரப்பியது.

வேதாகமத்தின் தொடக்கப் பகுதிகளையும் அதன் இறுதிப் பகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காலத்தின் முடிவில் அந்த இரண்டு மரங்களும், அதாவது, ஜீவ விருட்சம் மற்றும் நன்மை தீமை அறியத்தக்க அறிவு விருட்சம் ஆகிய இரண்டு அமைப்புகளை உருவாகியிருப்பதைக் காணலாம். அவையே எருசலேம் மற்றும் பாபிலோன் ஆகும். ஆவியினால் பிறந்தவர்கள், தேவனிலிருந்து தொடங்கி, தேவன் மூலமாகச் செயல்பட்டு, தேவனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்; ஆனால், மாம்சத்தினால் பிறந்தவர்கள், மனிதனிடமிருந்து தொடங்கி, மனிதன் மூலமாகச் செயல்பட்டு, வாழ்கிறவர்கள், அவரகள் அழிந்துபோவார்கள். இன்று, நாம் ஆதியாகமத்திற்கும் வெளிப்படுத்தின விசேஷத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் உணர்ந்தாலும் சரி, உணராவிட்டாலும் சரி, நாம் இந்த இரண்டு அமைப்புகளில் ஏதோ ஒன்றிற்குள் இருக்கிறோம்: ஒன்று தேவனை உயர்த்தி மகிமைப்படுத்த முயல்கிறது; மற்றொன்று மனிதனை உயர்த்தி மகிமைப்படுத்த முயல்கிறது. ஒன்று கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது, மற்றொன்று முந்தின ஆதாமைப் பின்பற்றுகிறது; ஒன்று ஆவியில் வாழ்கிறது, மற்றொன்று மாம்சத்தில் வாழ்கிறது. ஒன்று எருசலேமில் வாழ்கிறது. மற்றொன்று பாபிலோனில் வாழ்கிறது. நீங்கள் எந்த நகரத்தில் வாழ வாஞ்சிக்கிறீர்கள்? உங்கள் கண்கள் பரிசுத்த நகரத்தின் மீது பதிக்கப்பட்டதாய் காணப்படட்டும். ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் எனக்கு வேண்டும் என்று வாஞ்சிக்கிற நாம், ஆபிரகாம் வாஞ்சித்த பரிசுத்த நகரத்தையும் வாஞ்சிப்போம். அங்கே அழுகை இல்லை, கண்ணீர் இல்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org