கர்த்தர் உன்னைச் சோதித்து அறிகிறவர் (God is testing and knowing you).

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும் படிக்கும்,தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும் படிக்கும்,உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக (உபா. 8:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0aCPZUDNZZs

எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலைக் கடந்து சீனாய் மலையடிவாரத்தில் பாளயமிறங்கினார்கள். சீனாயிலிருந்து கானானின் கரையான காதேஸ்பர்னேயா,சேயீர் மலை வழியாக சுமார் பதினொருநாள் நடைப்பயண தூரத்தில் காணப்பட்டது (உபா.1:1). அங்கு வந்தபிறகு மோசே வேவு காரரைக் கானானுக்குள் அனுப்பி,தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ,கொஞ்சம் பேரோ அநேகம் பேரோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும்,அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது,அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்,அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பார்க்கும் படிக்கு, ஒரு கோத்திரத்திற்கு  ஒருவராகப்  பன்னிரண்டு வேவு காரரைக் கானானுக்குள் அனுப்பினான். நாற்பது நாட்களுக்குப் பின்பு அவர்களில் இரண்டு பேர் கானானைக் குறித்த நற்செய்தியைக் கொண்டு வந்தார்கள்,மற்ற பத்து பேரும் துற்செய்தியைக் கொண்டு வந்தார்கள். அவர்கள்  அவ்விசுவாசத்தினிமித்தம் நாற்பது நாட்களுக்குச் சரியாக நாற்பது வருடங்கள் அவர்களைக் கர்த்தர் வனாந்தரத்தில் அலையவிட்டார். ஒருபுறம் அவ்விசுவாசத்தின் நிமித்தமாய் காணப்பட்டாலும்,மறுபுறம் கர்த்தர் அவர்களை சிறுமை படுத்தினதின் நோக்கம்,அவர்கள் தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்களோ கைக்கொள்ளமாட்டார்களோ என்று சோதித்து, அவர்கள்  இருதயத்திலுள்ளதை   அறியும் படிக்கு  என்று  மேற்குறிப்பிடப்பட்ட  வசனம் கூறுகிறது.  கர்த்தருடைய பிள்ளைகளே,சில வேளைகளில் கர்த்தர் நம்மைச் சோதித்து அறிகிறார். ஆகையால் சோதனைகளையும், சிட்சைகளையும் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். தகப்பன்  சிட்சியாத புத்திரன் உண்டோ என்று வேதம் கேட்கிறது.

முற்பிதாக்களில் சிலர் கர்த்தரால் சோதிக்கப்பட்ட  வேளையில் சோதனைகளை ஜெயித்தார்கள். ஆபிரகாமைக் கர்த்தர், ஈசாக்கை பலியிடும் படிக்குக் கூறி சோதித்தார், அந்த  பரீட்சையில்  ஆபிரகாம் ஜெயித்தார். யோபுவை சோதிக்குப்படிக்குச் சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார். அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று விசுவாச அறிக்கை செய்து சோதனையை யோபு ஜெயித்தார்.  சோதனைகளில் தோற்றுப் போனவர்களும் அனேகர் உண்டு.  யெரொபெயாமிற்கு  விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லுவதற்குக் கர்த்தர் தீர்க்கதரிசி ஒருவரை பெத்தேலுக்கு அனுப்பினார். யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், அவர் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே,இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்,  அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்,  மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி, ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ இந்தப் பலிபீடம் வெடித்து, அதின் மேலுள்ள  சாம்பல் கொட்டுண்டுபோம், கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான். அப்படியே சம்பவித்தது. யெரொபெயாம் தேவனுடைய மனுஷனை தன் வீட்டிற்கு அழைத்த வேளையில், அவன் இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை,தண்ணீர் குடிப்பதுமில்லை.  ஏனென்றால் நீ அப்பம்  புசியாமலும், தண்ணீர் குடியாமலும்,போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி, அவன்  பெத்தேலுக்கு  வந்தவழியாய்த் திரும்பாமல்,வேறுவழியாய்ப் போய்விட்டான். ஆனால் கிழவனான வேறொரு கர்த்தருடைய தீர்க்கதரிசி பெத்தேலிருந்து போய் என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்று கூறி,உன்னை அழைத்து வரும்படிக்கு ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று பொய் சொன்னான். கர்த்தர் கிழவனான அந்த தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய மனுஷனைச் சோதித்தார். அந்த வேளையில் அவன் கர்த்தரிடம் விசாரியாமல், கர்த்தர் அவனுக்குக் கற்பித்த கட்டளையைக்   கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி அவனுடன் சென்றதின் நிமித்தம் சிங்கத்திற்கு இரையானான். இயேசு சிலுவையில் அடிக்கப்படுவதற்கு முன்பு சீஷர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன்,மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக, உமது நிமித்தம்  எல்லாரும்  இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றார். உடனே இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்கு முன்னே,நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று,மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும்  உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்,சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள். ஆனால் கர்த்தர் சொன்னபடியே பேதுரு இயேசுவை அறியேன் என்று மறுதலித்தான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,கர்த்தர் நம்மைச் சோதிப்பது எதற்காக என்று பார்க்கும் போது,நம்முடைய பின்னாட்களில் நமக்கு  நன்மை செய்யும் பொருட்டு,நம்மைச் சிறுமைப்படுத்தி,சோதிக்கிறார் என்று உபா. 8:15ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் சோதனைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து,சோதனைகளை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் என்று வேதம் கூறுகிறது.  மனுஷருக்கு  நேரிடுகிற  சோதனையே அல்லாமல் வேறு ஒன்றும் ஒருவருக்கும் நேரிடவில்லை. ஆகையால் ஏன் எனக்கு மாத்திரம் இப்படிச் சம்பவிக்கிறது என்று கேட்காதிருங்கள். சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்,அவன் உத்தமனென்று விளங்கியபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின  ஜீவகிரீடத்தைப்  பெறுவான். கர்த்தர் உங்கள் உத்தமத்தையும்,உண்மையாய் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள் என்பதையும் அறிந்து உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *