பகையும் அன்பும் (Hatred and Love)

நீதி 10:12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/65xb-A3Kruk

1 பேதுரு 4:8-ல் கூறுகிறது, அன்பு திரளான பாவங்களை மூடும் என்பதாக. பேதுரு அதைக் கூறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, சாலொமோன் அதைக் கூறினார். நாம் அதை எல்லாப் பாவங்களின் மீதும் ஒரு துணியைப் போட்டு மறைக்கிறது என்று விளங்கிக்கொள்ளலாம். நாம் தேவனுடைய பிள்ளைகளா அல்லது பிசாசின் பிள்ளைகளா என்பதை எளிதாக அறிந்துகொள்ள வேண்டும். தேவன் அன்பாகவே இருக்கிறார். பிசாசு ஒரு கொலைகாரன்; தேவனுடைய பிள்ளைகள் தங்கள் இருதயங்களில் ஒருவருக்கொருவர் காட்டும் தேவ அன்பினால் அடையாளம் காணப்படுகிறார்கள், பிசாசின் பிள்ளைகள் வெறுப்பினால் அடையாளம் காணப்படுகிறார்கள். இன்றைக்கு அநேக அரசியல்வாதிகளும், தலைவர்களும் வெறுப்புகளை ஜனங்கள் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தானின் ஒரு ஆயுதம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

நம் நாவினால் நாம் பேசும் வார்த்தைகளைக் கொண்டு, நம் இருதயத்தில் எந்தக் குணம் இருக்கிறது என்பதைக் கண்டறிவது மிகவும் எளிது. நீங்கள் பழைய பிரச்சினைகளை கிளறுபவராக இருந்தால், அதாவது, ஒருவருடன் உங்களுக்குக் கருத்து வேறுபாடு ஏற்படும்போது, கடந்த காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்தால், நீங்கள் அன்பைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும், தேவனுடைய வார்த்தையின்படி உங்கள் இருதயத்தில் பகைமை இருக்கிறது. அன்பு ஒருபோதும் பழைய சச்சரவுகளைக் கிளறுவதில்லை. அன்பு எல்லாப் பாவங்களையும் மூடுகிறது. ஆகவே, நம் இருதயங்களில் அன்பு இருக்கிறதா அல்லது பகைமை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். பகைமை கொண்ட ஒருவனின் அடையாளம் என்னவென்றால், அவன் எப்போதும் ஒரு பிரச்சனையைத் தொடங்கத் தயாராக இருப்பான்; சகோதரனுடன் பிரச்சனை, சகோதரியுடன் பிரச்சனை, தன் திருமணத் துணையுடன் பிரச்னை என்று பிரச்னை செய்யாமல் அவன் ஒருநாளும் தூங்கமாட்டான்.

இப்படிப்பட்ட பகைமையுணர்வு இந்நாட்களில் பல தேசங்களிலும் காணப்படுகிறது. ஒரு தேசம் மற்ற தேசத்துடன் மிகவும் பகைமையுணர்வை வளர்க்கிறவர்களாக காணப்படுகிறது. அப்படியே மனிதர்களும் தங்கள் பகைமையை வளர்க்கிறவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் இந்த கடைசி காலத்தில் பகைமையை வளர்க்காமல், அன்போடு மற்ற மனிதர்களிடம் பழக வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். பகை இருக்கும் இடத்தில் விரோதங்களும் எதிராளிகளும் பெருகிவிடுவார்கள். அன்பு இருக்கும் இடத்தில் சமாதானமும் சந்தோஷமும் காணப்படும். ஆகையால் தேவனைப்போலவே அவருடைய பிள்ளைகளாகிய நாம் அன்போடு காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *