தாவீதின் மூன்று அபிஷேகங்கள் (David’s Three Anointings)

இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள், தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் (2 சாமு. 5:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5vmleqi8kiw

தேவன் அவருடைய பிள்ளைகளை  அபிஷேகிக்கிறவர். அவர் இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் அபிஷேகம் பண்ணுகிறார். அவருடைய அபிஷேகம் நுகத்தடிகளை,  அதாவது உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற தடைகளை முறிக்கும், அபிஷேகம்  சகலவற்றைக் குறித்து உங்களுக்கு போதிக்கும், கர்த்தருடைய அபிஷேகம் உங்களை வாழவைக்கும். ஆகையால் ஆவியானவர் அருளுகிற அபிஷேகத்தை விரும்புங்கள். 

சாமுவேல் தீர்க்கதரிசி முதல்முதலாகத் தாவீதை அபிஷேகம் பண்ணினார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் பண்ணினான்,  அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார் என்று 1சாமு.16:13 கூறுகிறது. கர்த்தர் தன்னுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தேடினார் என்று 1சாமு. 13:14 கூறுகிறது, அப்படிப்பட்டவனை அவர் கண்டுபிடித்து, முதலில் அவனைச் சகோதரர்கள் மற்றும் பெற்றோர்கள் நடுவில்   உயர்த்தி அபிஷேகம் பண்ணினார். தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் எப்படி மாறியிருக்கக் கூடும், அவன் வனாந்தரத்தில்  ஆடுகளை மேய்க்கும் போது அவன் அதிகமாய் கர்த்தரைத் தேடியிருக்கலாம். அவனுக்குக் கர்த்தரைத் தேடக் கற்றுக்கொடுத்தவள், அவனுடைய தாயாராய் இருந்திருக்கலாம். அவளைக் குறித்து தாவீதுக் கூறும் போது, அவள் உம்முடைய அடியாள் என்று சங்கீதத்தில் இரண்டு முறைக் கூறினான்.    கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களை அபிஷேகம் பண்ணும் போது, உங்கள் குடும்பத்தின் நடுவில் நீங்கள் உயர்ந்திருப்பீர்கள்.   யோசேப்பின் அரிக்கட்டு தங்கள் சகோதரர்கள் நடுவில் நிமிர்ந்து நின்றது போல, உங்களைத் தலை நிமிர்ந்து நிற்கும்படிக்கு கர்த்தர் செய்வார்.

இரண்டாவது, யூதா கோத்திரத்து ஜனங்கள், தங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த தாவீதை எப்ரோனிலே தங்கள் மேல் இராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று 2 சாமு. 2:4 கூறுகிறது. முதல் அபிஷேகத்திற்கும், இரண்டாவது அபிஷேகத்திற்கும் இடைபட்ட காலம் சுமார் பதினைந்து வருடங்களாய் காணப்படுகிறது.  இந்தப் பதினைந்து வருஷங்களின் நடுவில் சவுல் தாவீதை ஒரு தௌளுப்பூச்சியைப் போல அதிகமாய் நெருக்கி வேட்டையாடினான். ஆகிலும் கர்த்தருடைய அழைப்பும் தெரிந்துகொள்ளுதலும்  மாறாதவையாய் காணப்படுவதினால் கர்த்தர் தாவீதை அவன் கையில் ஒப்புக் கொடுக்கவில்லை. கர்த்தர் தன்னுடைய வார்த்தையின்படி அவனை யூதாவின் மேல் இராஜாவாக அபிஷேகம் பண்ணினார். தாவீது சிங்காசனத்தைத்  தேடவில்லை, கர்த்தர் அவனை உயர்த்தி சிங்காசனத்தில் அமரும் படிக்குச் செய்வார். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களை அபிஷேகிக்கும் போது உயர்வுகள் உங்களைத் தேடிவரும், உங்கள் ஜாதி ஜனங்கள் நடுவில் நீங்கள் உயர்ந்திருப்பீர்கள். 

மூன்றாவது,   தாவீதை சமஸ்த இஸ்ரவேல் ஜனங்கள், அதாவது பன்னிரண்டு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் மேல் இராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே  ராஜாவினிடத்தில் வந்தார்கள், தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணின பின்பு, அவர்கள் தாவீதை  இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று 2 சாமு. 5:3 கூறுகிறது. தாவீது யூதாவின்மேல்  ராஜாவாகி சுமார் ஏழு வருஷமும் ஆறு மாதமும் சென்ற பின்பு முழு இஸ்ரவேல் தேசத்தின் மேலும் ராஜாவானான். அவனை, அவன் குடும்பம் மற்றும் கோத்திரத்தின் நடுவில்  அபிஷேகித்து உயர்த்தின தேவன், இப்பொழுது முழுத் தேசத்தின் மேலும் உயர்த்தினார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய அபிஷேகத்தில் வளர வளர அந்த அபிஷேகம் உங்களை உயர்த்திக் கொண்டேயிருக்கும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு தேசம் அறியும் படிக்கு உயர்ந்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *