சொற்ப மதியீனம் (Little foolishness) 

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும், ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிர. 10:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/b5LEXAsL8N4

சாலொமோன் அறிவில் சிறந்தவன், ஞானிகளுக்கெல்லாம் ஞானியாய் காணப்பட்டவன். சர்வஞானியாகிய ஆண்டவர் அவனுடைய வேண்டுதலைக் கேட்டருளி, உன் வார்த்தைகளின்படி செய்தேன், ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன், இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை என்று 1 இரா. 3:12ன் படி அதிக ஞானத்தை அவனுக்குக் கொடுத்தார். அப்படிப்பட்டவன் கூறும் போது, ஒருவனுடைய சொற்ப மதியீனம் மிகுந்த கனத்தை இழக்கும் படிக்குச் செய்யும் என்று எழுதினான்.  பிரசங்கி புத்தகம் அவனுடைய வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் எழுதிய புத்தகம், மாயை என்ற வார்த்தை அடிக்கடி வருகிறதை வாசிக்கும் போது புரிந்துகொள்ள முடியும். அவனுடைய சொற்ப மதியீனம், அதாவது கர்த்தருடைய  பிரமாணத்திற்குப் புறம்பாக, பார்வோனுடைய குமாரத்தியை விவாகம் செய்தது முதல், பின்பு அனேகப் புறஜாதி ஸ்திரீகளை விவாகம்  செய்ததின் நிமித்தம், தேவபிரசன்னத்தை முழுமையுமாய் இழந்து மதி கெட்டவனைப் போல மாறியதைக் கூட அவன் கருத்தில் கொண்டு எழுதியிருக்கக் கூடும்.

வேதத்தில் சொற்ப மதியீனத்தின் நிமித்தம் மேன்மையை அனேகர் இழந்து போனார்கள். ஒரு வேளைப் பசியை அடக்கமுடியாததினால், தலைமகனுடைய இரட்டிப்பான ஆசீர்வாதத்தை ஏசா இழந்து போனான். மோசேயின் ஒரு சிறிய கோபம், கானானை இழக்கும் படிக்குச் செய்தது. சவுல் கீழ்ப்படியா மையின் நிமித்தம் இராஜாங்கத்தை இழந்து போனான். போர்முனையில் காணப்பட வேண்டிய தாவீது, சோம்பலின் நிமித்தம் அரண்மனையின் உப்பரிக்கையின் மேல் உலாவ, பத்சேபாளுடன் பாவம் செய்து, அவள் புருஷனைக் கொலை செய்து, அனேக  சாபங்களை  சம்பாதித்தான். சொற்பப் பண ஆசையின் நிமித்தம், அதாவது முப்பது வெள்ளிக்காசுக்காக யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்து, கடைசியில் நான்று கொண்டு செத்தான். இப்படிப்பட்ட சிறிய தவறுகள் மூலம், சாபத்தைச் சம்பாதித்து, மேன்மையான ஆசீர்வாதத்தை இழந்தவர்கள் திரளாய் காணப்படுகிறார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளே, பரிமளதைலம் வைத்திருக்கும் பரணியின் மூடியைத் திறந்து ஈக்கள் உள்ளே போவதற்கு இடம் கொடுத்ததைப் போல, உங்கள் இருதயக் கதவுகளைத் திறந்து கோபம், எரிச்சல், பொறாமை, பெருமை என்ற பிசாசு அனுப்புகிற ஈக்களுக்கு இடம் கொடுத்து விடாதிருங்கள். உங்களுடைய சின்ன தவறுகள், நீங்கள் கடினமாய் உழைத்து உருவாக்கிய நற்பெயரைக் கெடுத்துவிடும். சிறுநரிகளையும், குழி நரிகளையும் கர்த்தருடைய தோட்டமும் பண்ணையுமாகிய சபையில் அனுமதித்து விடாதிருங்கள். அது தோட்டத்தைக் கெடுத்து விடும். உங்கள் குடும்பங்களில் செத்த ஈக்களைப் போன்ற நபர்களை அனுமதித்து விடாதிருங்கள், அப்படிப்பட்டவர்கள் உங்கள் வாசனையைக் கெடுத்து விடுவார்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *