கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது, மகிமையுள்ள தேவன் முழங்குகிறார், கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்(சங். 29:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Q44P-8ZTOsM
கர்த்தருடைய சத்தம் என்ற வார்த்தையானது ஏழு முறை 29ம் சங்கீதத்தில் வருகிறது. யாவே என்ற, இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று அழைக்கப்படுகிற தேவனுடைய சத்தம் மிகுந்த வல்லமையும், மகத்துவமும் உள்ளது. அவருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது, அக்கினி ஜீவாலைகளை பிளக்கிறது, வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறது, பெண் மான்களை ஈனும் படிக்குச் செய்கிறது. அதே கர்த்தருடைய சத்தம் அவருடைய வசனங்கள் மூலம் நமக்கும் இந்நாட்களில் தொனிக்கிறது. சில வேளைகளில் சீனாய் மலையில் தொனித்தது போல மிகுந்த வல்லமையுள்ளதாயும், சில வேளைகளில் எலியாவோடு பேசினது போல மெல்லிய சத்தமாகவும் காணப்படுகிறது. அது எவ்வாறு இருந்தாலும், அவருடைய மந்தையின் ஆடுகள் அவருடைய சத்தத்தை அறிவார்கள்.
கர்த்தருடைய சத்தம் எதற்காகத் தொனிக்கிறது? வேதத்தை வாசிக்கும் போதும், சபைகளில் செய்திகள் மூலமும் ஏன் வெளிப்படுகிறது?. ஆண்டவருடைய சத்தத்திற்கு நாம் கீழ்ப்படிந்து, செவிகொடுப்பதற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆடுகள் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது, அவைகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிற படியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது என்று யோவான் 10:3,4 கூறுகிறது. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் என்று வெளி. 3:20 கூறுகிறது. இந்நாட்களில் கர்த்தர் தொடர்ந்து பேசினாலும், செவிகொடுத்து கீழ்ப்படிகிறவர்கள் மிகக் குறைவு. இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியவில்லை, இஸ்ரவேலிலும், யூதாவிலும் தோன்றின அனேக ராஜாக்கள் கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியவில்லை. அதன் விளைவை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கர்த்தர் தமது வார்த்தையின்படி, கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார் என்று அதே சங்கீதம் 29:11ல் எழுதப்பட்டிருக்கிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியும் போது கர்த்தர் உங்களுக்குப் பெலன் கொடுப்பார். சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவர், கழுகுக்கு ஒப்பாக உங்கள் பெலன் புதுப்பிக்கப்படும், காண்டாமிருகத்திற்கு ஒத்த பெலனைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பார். உங்கள் நாட்களுக்குத் தக்கதாக உங்கள் பெலனிருக்கும். அதுபோல, நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியும் போது, கர்த்தர் உங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிட்டு, முழுமையான நல்வாழ்வை அருளிச்செய்வார். எல்லா ஆசீர்வாதங்களுக்கும் மேலானது கர்த்தருடைய சமாதானமாய் காணப்படுகிறது. கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள் மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடுவார் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களையும், உங்கள் சந்ததிகளையும் பின்தொடரும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

