கலா 2 : 9 , 10 எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து, தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NzNkgujSg1U
இந்தியா மாத்திரமல்ல, உலகத்தில் அநேக இடங்களில் இன்னும் பட்டினிச் சாவுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பது தெரியுமா? மிஷினரிப் பணியிடங்களில் அநேக மிஷினரிகள் அன்றாடத் தேவைக்காய் அல்லல்பட்டு, மிகவும் கடினமான பாதையில் கிறிஸ்துவை அறிவித்துக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரியுமா? இல்லையென்றால், இவைகளெல்லாம் தெரிந்தும் தெரியாதவர்களைப் போல நாம் காணப்படுகிறோமோ? தரித்திரர்களை நினைத்துக்கொள்ளாமல் இருந்தால், நாம் இன்னும் கிறிஸ்துவை சேவிக்கவில்லை என்றே கூறலாம். என்றோ வாழ்ந்த அன்னை தெரசா மற்றும் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் காலத்தில் இருந்த தர்ம ஊழியங்கள் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் போன தருவாயில் இன்று அநேக சபைகள் காணப்படுகிறது.
ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும் என்று யாக்கோபு 4:17 கூறுகிறது. அப்படியென்றால், நன்மை செய்யாமல் இருப்பது பாவம் என்றே வேதம் கூறுகிறது. ஆதிசபையின் நாட்களில் அப்போஸ்தலர்கள் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள், அவர்கள் குறைவில்லாமல் இருந்தார்கள் என்று வசனம் கூறுகிறது. கிறிஸ்துவுக்கு முன்பாக வந்த யோவான் ஸ்நானகன் சொல்லுகிறான், “இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்” என்றான் (லூக்கா 3:11). மாத்திரமல்ல, இயேசுவும் அவர் வாழ்ந்த காலத்தில், “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 25:40) என்றார். கிறிஸ்துவுக்குப் பிறகு வாழ்ந்த அப்போஸ்தலர்களும் எளியவர்களை நினைத்துக்கொள்ளுங்கள் என்றே கூறினார்கள். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரும் தரித்திரரை நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதுபோல பவுலும் பர்னபாவும் கூட தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படி யோசனை சொன்னார்கள். இன்று நாம் தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படியாகவும், அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு உதவிக்கரம் நீட்டுகிறவர்களாகவும் காணப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்கள் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கிறார்கள். ஆகையால், தான தர்மம் செய்ய உங்கள் கைகளை குறுகாக்காமல், திறந்து கொடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

