கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்வு (God’s approved life)

கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்தப் பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? (சங். 15:1)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ggG5Qn01X8M

சாதாரணக் கிறிஸ்தவ ஜீவியம் செய்வது ஒன்று, கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஜீவியம் செய்வது இன்னொன்றாய் காணப்படுகிறது. மனுஷனுடைய அங்கீகாரத்திற்காக வாழ்கிறவர்களாய் காணப்படாமல் இயேசு நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ வேண்டும். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன், உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக என்ற சங்கீதக்காரனுடைய ஜெபம் நம்முடைய ஜெபமாய்க் காணப்பட வேண்டும். ஆதிப்பெற்றோரின் பிள்ளைகளாகிய காயீனும், ஆபேலும்  பலிசெலுத்தும்படிக்குப் போனார்கள். ஆபேலுடைய பலி, உத்தமமானதாகவும்,  முதற்பலனாகவும், இரத்தங்கலந்ததாகவும் காணப்பட்டதினால் கர்த்தர் அதை அங்கீகரித்தார்.  காயீனுடைய பலி கடமைக்காய் செலுத்துவதாகக் காணப்பட்டதினால் கர்த்தர் அதை அங்கீகரிக்கவில்லை. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும், நாம் செய்கிற ஒவ்வொரு காரியங்களையும் கர்த்தர் அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்து அறிய வேண்டும். ஊழியக்காரர்களும் கர்த்தர் அங்கீகரிக்கிற ஊழியம் செய்ய வேண்டும், நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு என்று 2 தீமோத்தேயு 2:15 கூறுகிறது. ஆதிசபையின் நாட்களில் அப்போஸ்தலர்கள் கர்த்தருடைய அங்கீகாரத்தையே விரும்பினார்கள்.இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா  பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப்  பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே என்று அப்போஸ்தலனாகிய பவுல் கலா. 1:10ல் குறிப்பிடுவதைப் பார்க்கமுடிகிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது, கர்த்தருடைய கூடாரத்தில் தங்குவதற்கும், அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவதற்கும் உள்ள தகுதி என்ன என்பதைக் குறித்து சிந்தித்த சிந்தனையின் விளைவாகக் கர்த்தர் கொடுத்த பாடலாய் சங்கீதம் 15 காணப்படுகிறது. கர்த்தருடைய ஆலயத்தில் வந்து செல்லுகிறவர்களாய் மட்டும் அல்ல, கர்த்தர் அங்கீகரிக்கிற பாத்திரங்களாக நாம் காணப்பட வேண்டும். தாவீதின் நாட்களில் ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்த அறிவும், மோரியா பர்வதத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற வெளிப்பாடும் அவனுக்குக் காணப்பட்டது. ஆகையால்தான் கூடாரத்திலும், பரிசுத்தப் பர்வதத்திலும் யார் தங்குவான், வாசம் பண்ணுவான் என்று துவங்கினான். அப்படிப்பட்டவர்களுடைய தகுதி, உத்தமனாய் நடக்கவேண்டும்,  நீதியை நடப்பிக்கவேண்டும், சத்தியத்தை உண்மையை பேசவேண்டும்,  யாரையும் குறித்து புறங்கூறலாகாது,  யாருக்கும் தீங்கு செய்ய கூடாது, அயலானைக் குறித்த நிந்தையான பேச்சிற்கு  செவிசாய்க்கலாகாது, நல்லொழுக்கமில்லாதவர்களை விட்டு  விலகவேண்டும்,  கர்த்தருக்கு பயந்தவர்களை கனம்பண்ண வேண்டும், வாக்கு கொடுத்ததில் நஷ்டம் வந்தாலும் சொல் தவறாமல் காணப்படவேண்டும்,  வட்டிக்கு பணம் கொடுக்ககூடாது, பரிதானம் வாங்கலாகாது  என்பதாகக் கர்த்தருடைய ஆவியானவர் மூலம் வெளிப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். 

கர்த்தருடைய பிள்ளைகளே, சபைக்கு வந்து கர்த்தரை  ஆராதிக்கி  நமக்குள்ளாக இப்படிப்பட்ட மாற்றங்கள் வருகிறதா? என்பதைச் சோதித்தறியுங்கள். இப்படிப்பட்டவர்கள் ஒருநாளும் அசைக்கப் படுவதில்லை என்று கர்த்தர் வாக்குக் கொடுக்கிறார். நம்மைச் சுற்றிக் காணப்படுகிற காரியங்கள் அசைந்து,  அழிந்து போகலாம், ஆனால் உங்கள் பர்வதங்கள் திடமாய் நிற்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *