விருந்தினர் அறை (Guest Room)

பிலே 22 மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2pMoP_nrhsA

பவுலின் மூலம் இரட்சிக்கப்பட்ட பாத்திரமான பிலேமோனுக்கு பவுல் உரிமையோடு ஒரு காரியத்தைக் கேட்கிறான்; அவன் வரும்போது அவனுக்கென்று தங்குவதற்கு ஒரு அறையை ஆயத்தம்பண்ண வேண்டும் என்று கேட்பவனாய் காணப்படுகிறான். பரிசுத்த ஆவியானவர் இதன் மூலம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்னவென்றால், காடு மலை பாராமல், தங்கள் சொந்த ஊர்களை விட்டு, உறவினர்களை விட்டு, குடும்பத்தை விட்டு, சுவிசேஷம் சொல்லும்படி, ஊழியம் செய்யும்படி கடந்து செல்லும் ஊழியர்களுக்கு வேண்டிய உதவிகளை நாம் செய்து தருபவர்களாய் காணப்பட வேண்டும்.

மத் 10: 40-42 வசனங்கள் கூறுகின்றன: உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் என்பதாக. உங்கள் வீட்டிற்கு வரும் ஒரு ஊழியக்காரருக்கு ஒரு கலசம் குளிர்ந்த தண்ணீர் கொடுத்தாலே அதற்கான பலனை அடையாமல் போவதில்லை என்றே ஆண்டவர் கூறுகிறார். அதாவது, வேலை மெனக்கெட்டுப் போய் அடுப்பை பற்றவைத்து, சில நிமிடங்கள் தண்ணீரைச் சூடாக்கி பின்பு கொண்டு வந்து கொடுக்காமல் இருந்தாலும், வெறும் குளிர்ந்த தண்ணீரை கொடுத்தாலே அவன் பெரிய பலனைப் பெறுவான். அப்படியென்றால், சுடு தண்ணீர் போட்டு கொடுப்பவன் எவ்வளவு அதிகமாய் பலனைப் பெறுவான் என்று யோசித்துப்பாருங்கள்.

யோவானின் அறிவுரையும் அதுவாகவே இருக்கிறது. 3 யோவா 5,6 கூறுகிறது: பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்கு முன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும் என்பதாக. ஒருவரை வரவேற்பது மாத்திரமல்ல, சரியானபடி வழிவிட்டனுப்பி வைப்பதும் மிகவும் முக்கியம் என்ற அறிவுரையை யோவான் கூறுகிறார்.

இயேசு சொன்னார், நீ எனக்குத் தண்ணீர் தரவில்லை, முத்தம் தரவில்லை, எண்ணெய்த் தரவில்லை, தங்குவதற்கு உடை தரவில்லை, உடுத்த உடை தரவில்லை என்று கூறினார். இவ்வித புகார்களை இயேசு இன்று எத்தனை பேரிடம் தான் காண்கிறாரோ நாம் அறியோம்! ஆகையால், நம்மால் இயன்ற அளவு மிஷினரிகளையும் நினைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *