நீதி 18 : 17 தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/cDmrT_bWZnY
பெற்றோர்களுக்கு, குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தை ஒரு விஷயத்தை ஒரு விதமாகக் கூறும், மற்றொரு குழந்தை முற்றிலும் மாறுபட்ட ஒன்றைக் கூறுவதைக் காண முடியும். வேலை ஸ்தலத்திலும் கூட, ஒரே குழுவில் பணிபுரிபவர்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை மேலதிகாரிகளிடம் முறையிடுபவர்களாகக் காணப்படுவார்கள். அதனால்தான் ஆண்டவர் நமக்கு இரண்டு காதுகளைக் கொடுத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. இரண்டு காதுகள் மூலம் நாம் ஒரு தரப்பைக் கேட்க முடியும், பின்னர் மறு தரப்பையும் கேட்க முடியும். அதன் பிறகு நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். நாம் ஒரே ஒரு காதுடன் வாழும் மக்களாக வாழக்கூடாது; அது பாரபட்சம். நாம் இரு தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும், அப்போதுதான் நம்மால் சரியான முடிவை எடுக்க முடியும்.
அநேக வேளைகளில் தன் தரப்பை முதலில் வாதிடுபவரே சரியானவர் என்று தோன்றுவது போலக் காணப்படும். ஏனென்றால், அவர் தான் செய்த எல்லா தவறுகளையும் மறைத்துவிட்டு, மற்றவர் செய்த தவறுகளை மட்டுமே முன்வைக்கும் விதத்தில் தன் தரப்பை முன்வைக்கிறார். குழந்தைகள் அப்படித்தான்: “அவன் இதைச் செய்தான், அவன் அதைச் செய்தான்!” என்று சொல்வார்கள். மற்றொரு குழந்தை வந்து, “அவன் இதைச் செய்தான், அவன் அதைச் செய்தான்!” என்று சொல்லும். அவர்கள் இருவரும் சொன்னது உண்மைதான். ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், அது முழுமையான உண்மை அல்ல; அவர்கள் தாங்கள் செய்ததை மறைத்திருக்கிறார்கள். இப்போது, அது பிள்ளைகளுக்குப் பரவாயில்லை; ஆனால் வளர்ந்த விசுவாசிகளிடமும் இந்த நியாயப்படுத்தும் ஆவி இருப்பது எவ்வளவு வருத்தமளிக்கிறது.
சாலொமோனிடம் ஒரு வழக்கு வருகிறது. “இது என் பிள்ளை” என்று இரண்டு பெண்களும் வாதாடினார்கள். சாலொமோன் ஒருதலைப்பட்சமாக இல்லாமல், இரண்டு தரப்பும் பேசுவதைக் கேட்ட பின்புதான் ஒரு தீர்மானத்திற்கு வந்தான். அதுபோல நாம் முதலில் வந்து முறையிடுகிறவர்களுக்கே சாதகமாக இல்லாமல், மற்றவர்களுடைய கருத்தையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்ற ஞானத்தை இங்கே ஞானி சொல்லுகிறார்.
மாத்திரமால், நீங்களும் வேலையில் உங்கள் அதிகாரிகளிடம் சென்று ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது, மற்றவர்கள் மீது உள்ள தவறையும் அதோடு உங்கள் மீது உள்ள தவறுகளையும் மேலதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அப்பொழுது மற்றவன் உங்களை குற்றப்படுத்தும்போது, நீங்கள் மேலதிகாரியிடம் ஒன்றையும் மறைக்கவில்லை என்று அவர் புரிந்துகொள்வார். ஆகையால், வழக்கிலே முதலில் பேசினால் உங்கள் மீதுள்ள தவறையும் சொல்லுங்கள்; மற்றவர்கள் வந்து வழக்கைச் சொல்லும்போதும் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு முடிவெடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

