இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார் (He could no longer bear the misery of Israel)

நியா 10:16. அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/K4yHyM0XeME

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை நடத்திக்கொண்டு வந்த தேவனை மறந்து, அந்நிய தேவர்களை பின்பற்றினார்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு ஆபத்து நேரிடும்போது நான் உங்களை இரட்சிப்பதில்லை, நீங்கள் நம்பின அந்நிய தேவர்களே உங்களை இரட்சிக்கட்டும் என்று கூறிவிட்டார். அதை கேட்ட ஜனங்கள், மனதில் குத்தப்பட்டவர்களாய், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டோம் என்று சொல்லி ஆண்டவருக்கு நேராக தங்களை திருப்பினார்கள். அதுமாத்திரமல்ல, தாங்கள் செய்த அந்நிய தேவர்களை தங்களிடமிருந்து விலக்கிவிட்டார்கள். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் வருத்தத்தை பார்த்து மனதுருகினார்.

எப்பொழுதெல்லாம், தேவ ஜனங்கள் தங்களுடைய பாவத்தை உணர்ந்து, விலக்கிவிட வேண்டிய காரியங்களை விலக்குகிறார்களோ, அப்பொழுதெல்லாம் கர்த்தர் மனதுருக்கம் உடையவராய், இரட்சிக்கிற தேவனாய் காணப்படுகிறார். நம்முடைய வாழ்க்கையிலும் விலக்கிவிட வேண்டிய அந்நிய தேவர்களை, அந்நிய பாகால்களை, தேவனுக்கு விரோதமான அந்நிய சுபாவங்களை நம்மிடமிருந்து விலக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். யோசுவா சொல்லுவான், அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான் (யோசு 24:23) என்பதாக. சாமுவேல் தீர்க்கதரிசி சொல்லுவான், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான் (1 சாமு 7:3) என்பதாக.

இப்படி அந்நிய தேவர்களை, சுபாவங்களை விட்டு நாம் விலகும்போது, நம்முடைய தேவன் நம் மீது மனதுருகுவார். நம்முடைய தேவன் மனதுருக்கமுள்ளவர். எப்பீராயீமை பார்த்து கர்த்தர் சொல்லும்போது, என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏரே 31:20). இமைப்பொழுது அவர் கைவிட்டாலும், உருக்கமாக இரங்குகிற தேவனிடம் திரும்புங்கள். அவருடைய மனதுருக்கம் நீடிய வாழ்வை தரும். உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி மகிழப்பணுவார் என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் வருத்தங்களை பார்த்து, உங்கள் மேல் கர்த்தர் மனதுருகுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *