கர்த்தருடைய வல்லமை விளங்க ஒரு ஆலோசனை (A suggestion to understand God’s strong support).

2 நாளா 16:9. தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XheCaef9OhQ

எத்தனையோ வெற்றிகளை ஆண்டவர் தந்திருக்கும்போது ஆசா ராஜா கர்த்தரை சார்ந்துகொள்ளாமல் சீரிய இராஜாவை சார்ந்துகொண்டான். இப்படி கர்த்தரை சார்ந்துகொள்ளாத செயல் மதியீனம் என்று ஆண்டவர் கூறுகிறார். நாமும் எந்தவொரு காரியத்திலும் ஆண்டவரை சார்ந்துகொள்ளாமல் மனிதர்களையோ சூழ்நிலைகளையோ அதிர்ஷ்டத்தையோ சார்ந்துகொள்ளுவோமென்றால், நம்மை பார்த்து ஆண்டவர் சொல்லுவார் நீங்கள் மதியீனமுடையவர்கள் என்று. ஆகையால் ஆசாவை போலல்லாமல், எல்லாவற்றிலும் கர்த்தரை சார்ந்துகொள்ளுவோம்.

சிலர் சொல்லுவார்கள் இவர் எனக்கு வலதுகை போன்றவர், எல்லாவற்றிலும் எனக்கு உதவுபவர் என்பதாக சொல்லுவார்கள். ஆனால் வேதம் சொல்லுகிறது நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய வலதுகரத்தின் மீதே நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதாக. நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும் என்று சங் 118 : 15-16ல் மூன்று முறை கர்த்தருடைய வலதுகரம் என்ற வார்த்தையை ஆவியானவர் முக்கியப்படுத்துகிறார். இதே சங்கீதம் 8,9 வசனங்கள் கூறுகிறது மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்பதாக.

பாபிலோனியரால் அழிக்கப்பட்ட ஆலயத்தை திரும்ப கட்டும் பெரிய வேலையை செருபாபேல் முன்னின்று நடத்தினான். செருபாபேல் ஒரு தலைவன். ஆனால் அவனுக்கு ஆண்டவரிடமிருந்து வந்த வார்த்தை பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலேயே ஆகும் என்பதாக. பலம் அல்லது பராக்கிரமம் என்பது ஆள் பலம், பணம் பலம், தொழில் பலம், புயபலம் போன்றவைகள். செருபாபேல் மற்றவர்களுடைய பலத்தை சார்ந்துகொள்ளாமல், கர்த்தருடைய பலத்தை சார்ந்து நின்றதால் கர்த்தர் அவர்கள் கையிட்டு செய்யும் காரியங்களை வாய்க்க பண்ணினார். எருசலேமின் மதில்களை திரும்ப கட்டும் பிரமாண்ட வேலையை நெகேமியா எடுத்து செய்தான். அவனும் அவனோடு வேலை செய்தவர்களும் தேவனை முழுவதுமாக சார்ந்துகொண்டார்கள். ஆகையால், கர்த்தர் காரியத்தை கைகூடிவரப்பண்ணினார்.

உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய வல்லமை விளங்க வேண்டுமென்றால், உத்தம இருதயத்தோடு எல்லாக்காரியங்களிலும் கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது தேவையான உதவிகளை பரத்திலிருந்து கர்த்தர் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *