விசுவாசத்தில் உத்தம குமாரன் (True son in the faith).

1 தீமோ 1:2 – நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/uBfos0JDH0E

உத்தமம் என்பது வேதாகமத்தில் அநேக இடங்களில் வருகிறது. பவுலுக்கு அநேக உடன் ஊழியக்காரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சிலரையே உத்தமர் என்று சாட்சிகொடுத்தார். நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு (எபே 6:21) என்று தீகிக்கை உத்தமன் என்று அழைத்தான். எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள் (கொலோ 1:7) என்று எப்பாப்பிராவை உத்தமன் என்று அழைத்தான். உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன் (கொலோ 4:9) என்று ஒநேசிமுவை உத்தமன் என்று அழைத்தான். அதுபோல மேற்குறிப்பிட்ட வசனத்தில் தீமோத்தேயுவை உத்தமன் என்று பவுல் அழைக்கிறான்; குறிப்பாக விசுவாசத்தில் அவன் தன்னுடைய உத்தம குமாரன் என்று அழைக்கிறான்.

ஆண்டவர் நம்மிடமும் உத்தமத்தை அதிகமாக எதிர்பார்க்கிறார். சங் 12:1ன் படி, தாவீதின் அங்கலாய்ப்பு, உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள் என்பதாக கூறுகிறான். எரேமியாவும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல் (எரே 7:28) என்று அங்கலாய்க்கிறான். நம்முடைய அழைப்பு உத்தமம், உண்மை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தீமோத்தேயு விசுவாசத்தில் உத்தம குமாரன் என்று அழைக்கப்பட்டான். இவற்றில் விசுவாசத்தை குறித்து சபை விசுவாசிகள் அதிகமாக அறிய வாஞ்சிக்கிறார்கள், ஆனால் பரிதாபம் என்னவென்றால், உத்தமத்தை குறித்து அறிய அநேகருக்கு வாஞ்சையில்லை. தீமோத்தேயுவிற்கு இவை இரண்டும் காணப்பட்டது. அவனுக்குள் விசுவாசமும் காணப்பட்டது, உத்தமமும் காணப்பட்டது. ஆகையால் தான் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டு நிருபங்களிலும் தலைவர்களின் சிலாக்யங்களையும் பொறுப்பையும் குறித்து அதிகமாக எழுதியிருக்கிறார். இன்று நமக்கும் அது அதிகமாக பிரயோஜனமாக இருக்கிறது.

விசுவாசம் என்பது ஒரு ஈவு, நாம் அதை பெற்றுக்கொள்ள வேண்டும். உத்தமம் என்பது ஒரு கனி, நாம் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். தீமோத்தேயு இவை இரண்டையும் உடையவனாக காணப்பட்டான். நாமும் சபையில் விசுவாசத்தில் உத்தம குமாரனாக, தீமோத்தேயுவைபோல காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *