இயேசுவின் பாதம் ஒன்றே வேண்டும் (I need only Jesus Feet)

யோவான் 11:2 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7NCKux4j6gI

நன்றியுள்ள விலங்கு எது என்று கேட்டால், அனைவரும் சொல்லிவிடுவார்கள் நாய் தான் நன்றியுள்ள ஜீவன் என்பதாக. வீட்டில் வளர்க்கும் நாய்க்கு இருக்கும் நல்ல சுபாவத்தை கவனித்திருக்கிறீர்களா? அந்த நாயை வளர்ப்பவர்கள் காலை சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். அதுபோல தான் மரியாளும், இயேசுவை பார்த்தாலே அவள் அவருடைய பாதத்தை சுற்றி சுற்றி வருவாள். அவளுடைய தஞ்சமே இயேசுவின் பாதமாக இருந்தது. இயேசுவின் பாதம் இருக்கும் இடத்தில் மரியாள் இருப்பாள். இயேசுவை வீட்டிற்கு முதன்முதலாக அழைத்தது மார்த்தாள் தான். ஆனால், அவள் பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். மரியாளோ, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தாள். லாசரு மரித்தபோது, அவள் இயேசுவை கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து அழுதாள். லாசரு எழும்பியபிறகு, விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். அவள் தான், தன்னைவிட்டு எடுபடாத நல்லபங்கை தெரிந்துகொண்டாள். இயேசு எதிர்பார்ப்பது அவருக்காக வேலை செய்வதை காட்டிலும், அவர் பாதத்தில் முதலாக அமர்ந்து அவரோடு உறவுகொள்ளவே அவர் வாஞ்சிக்கிறார்.

இயேசுவை தன்னுடைய வீட்டிற்கு ஒரு பரிசேயன் அழைத்தான். அவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த பரிசேயன் வீட்டிற்கு வந்தார். பல மயில் தூரம் நடந்து வந்த இயேசுவை அவன் முத்தம் செய்யவில்லை, வெயிலினால் உலர்ந்துபோன தலைக்கு எண்ணெய் கொடுக்கவில்லை, மணலிலும் கற்களிலும் நடந்துவந்த இராஜாவின் காலுக்கு தண்ணீர் தரவில்லை. ஒரு அடிப்படை உபசரிப்பை செய்யவே அந்த பரிசேயன் மறந்துபோய்விட்டான். அவன் இயேசுவை அழைத்த அழைப்பு வெறும் பெருமைக்குத்தான். இப்படித்தான் இன்றைக்கும் அநேக கிறிஸ்தவர்கள் பெருமைக்காக தன்னை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளுகிறார்கள். ஊழியர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்பொழுது பாவியான ஒரு ஸ்த்ரீ, இயேசு அங்கே வந்திருக்கிறார் என்பதை கேள்விப்பட்டு, பாசத்தோடு, அவருடைய இன்பமான பிரசன்னத்தை காண ஓடோடி வந்தாள். கட்டாயத்திற்க்காக அவள் வரவில்லை; நன்றி நிறைந்த இருதயத்தோடு வந்தாள். பரணியின் பரிமளத்தை உடைத்து ஊற்றினாள். தேவ அன்பு கல்லான அவளுடைய உள்ளத்தை உடைத்தது. அவளுடைய கண்ணீர், இயேசுவின் வெந்த பாதத்தை நனைத்தது, குளிரச்செய்தது. தனக்கு மகிமையாய் இருந்த தலைமயிரினால் அவருடைய பாதத்தை துடைத்தாள். நீரே என் மகிமை; உம் பாதமே எனக்கு தஞ்சம் என்று வெளிக்காண்பித்தாள். உங்களுக்கும் இயேசுவின் பாதமே தஞ்சமாக மாறட்டும்.

அதுபோல, ஒரு சமாரியன் அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான் (லுக் 17:16). சீஷர்கள் இயேசுவை பார்த்தவுடன், அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள் (மத் 28:9). யவீரு அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்தான்(மாற் 5:22). அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள் (மாற்கு 7:25). சீமோன் பேதுரு இயேசுவின் பாதத்தில் விழுந்தான் (லுக் 5:8). இப்படி வேதாகமத்தில் பல நபர்கள் இயேசுவின் பாதத்தை பிடித்து அவரை தொழுதுகொள்ளுவதே அவர்களுடைய வாஞ்சையாய் வைத்திருந்தார்கள்.

ஆகையால் தான் பக்தர்களும் பாடினார்கள், உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே, உம்மையன்றி யாரைப்பாடுவேன், இயேசய்யா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே, என்றெல்லாம் பாடல்களை பாடி அகமகிழ்ந்தார்கள்; இயேசுவை தொழுதுகொண்டார்கள். நம்முடைய வாஞ்சையும் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய சத்தத்தை கேட்கவும், தொழுதுகொள்ளவும், அவருடைய பாதத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றவும் நம்மை அர்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *