நீதிமான்கள் விடுவிக்கப்படுவார்கள் (The righteous will be delivered)

நீதி 11 : 8 நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/opUYvrb9I7s

மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு சரியான உதாரணம் எதுவென்றால், செங்கடல் இரண்டாகப் பிளந்து திறந்தபோது, இஸ்ரவேலர்கள் அதன் வழியாகக் கடந்து சென்றார்கள், ஆனால் எகிப்தியர்கள் அதே செங்கடலில் மூழ்கி இறந்தார்கள். மற்றுமோர் உதாரணம் என்னவென்றால், எஸ்தர் புத்தகத்தில் உள்ள ஆமான் மற்றும் மொர்தெகாயின் சம்பவத்தில், ஆமான் மொர்தெகாயைத் தூக்கிலிடுவதற்காக ஒரு தூக்குமேடையை ஆயத்தப்படுத்தினான், ஆனால் இறுதியில் அவனே அதில் தூக்கிலிடப்பட்டான். நீதிமான் விடுவிக்கப்படுகிறான், துன்மார்க்கன் நீதிமானின் இடத்தைப் பிடிக்கிறான். தேவன் நல்ல மனிதர்களை ஆபத்திலிருந்து மீட்கிறார் என்பதையும், சாத்தான் நமக்கு ஏதாவது செய்ய முயலும்போது, அவர் நிலைமையை சாத்தானுக்கு எதிராகத் திருப்புகிறார் என்பதையும் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாம் நம்மைத் தாழ்த்தி, தேவனுக்கு முன்பாக நீதியுடன் வாழ்ந்தால், தேவன் எந்தவொரு ஆபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்ற வல்லவர். இதில், தீயவர்கள் நமக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டக்கூடிய காரியங்களும் அடங்கும். தேவன் நீதிமான்களை ஆபத்திலிருந்து மீட்கிறார்.

ஜான் வெஸ்லி என்பவரைப் பற்றிய ஒரு மிக அழகான கதை உண்டு; அவர் நீதியைப் பிரசங்கித்து, இங்கிலாந்தில் பலரால் வெறுக்கப்பட்டார். அவர் பலரைக் குடிப்பழக்கத்திலிருந்து விலக்கி வழிநடத்தியதால், மது விற்பனை குறைந்தது. மதரீதியான விபச்சாரத்தை அம்பலப்படுத்தியதற்காக அவர் வெறுக்கப்பட்டார். ஜான் வெஸ்லி இங்கிலாந்து முழுவதும் குதிரையில் பயணம் செய்வது வழக்கம். ஒரு நாள் இரவு அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தின் வழியாகப் பயணம் செய்வார் என்பது அவரை விரோதிக்கிறவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஜான் வெஸ்லி பயணம் செய்யவிருந்த பாதையில் இருந்த இரண்டு மரங்களுக்குக் குறுக்கே, இரவில் அவரால் அந்தக் கயிற்றைப் பார்க்க முடியாது என்ற நம்பிக்கையில், அவர்கள் ஒரு வலுவான ஆனால் மெல்லிய கயிற்றைக் கட்டினார்கள். அந்தக் கயிறு அவரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிடும் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. எதிர்பார்த்தபடியே, ஜான் வெஸ்லி அந்தப் பாதையில் குதிரையில் வந்துகொண்டிருந்தார். அவர் கயிற்றை அடைவதற்குச் சில வினாடிகளுக்கு முன்பு, ஒரு எறும்பு அவரது காலில் கடித்தது. அவர் தன் காலைச் சொறிவதற்காகக் குனிந்தபோது, கயிற்றுக்கு அடியில் பாதுகாப்பாகக் கடந்து மறுபுறம் வெளியே வந்தார். பார்த்தீர்களா, தேவன் ஏன் எறும்புகளைப் படைத்தார் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளலாம். அதுபோலத்தான் கொசு போன்ற அநேக விலங்கினங்களை உருவாக்கி அவைகள் மூலமாகவும் தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார் என்பதை நாம் பரலோகத்தில் சென்றபிறகு அறிந்துகொள்ளுவோம். ஜான் வெஸ்லி கூறுவதுண்டு, “நான் தேவனால் அனுப்பப்பட்டவன். என் காலம் முடியும் வரை யாரும் என்னைக் கொல்ல முடியாது.”என்பதாக.

தேவ ஜனங்களே, மற்றவர்கள் தீட்டும் சதித்திட்டங்கள் எதுவும் உங்களைத் ஒருபோதும் தொட முடியாது. அது இயலாத காரியம். எல்லாம் வல்ல தேவனே எல்லாவற்றையும் ஆளுகிறார். அவர் ராஜரீகம் பண்ணுகிறார். அவர் நீதிமான்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறார். உங்களையும் காப்பாற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org