அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று (1 இரா. 8:10).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/c_kyBBUqWes
மேற்குறிப்பிட்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேகம் தேவனுடைய பிரசன்னத்தையும், தேவனுடைய ஷெக்கினா மகிமையையும் குறிக்கிறது. கர்த்தருடைய கரத்தினால் தாவீதுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட மாதிரியின்படி, தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைகளையும், தாவீதின் குமாரனாகிய சாலொமோன் செய்து முடித்தான். ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணின நாளில் கர்த்தருடைய பிரசன்னம் ஆலயத்தை நிரப்பினது. ஆசாரியர்கள் கூட ஆலயத்தில் நின்று ஊழியம் செய்யக் கூடாத அளவுக்குக் கர்த்தருடைய பிரசன்னம் ஆலயத்தை முழுவதுமாய் நிரப்பினது. அதே கர்த்தருடைய மகிமையானது, நம்முடைய நாட்களிலும் வெளிப்படும் என்று ஏசா. 40:5ன்படி கர்த்தர் வாக்குக் கொடுத்திருக்கிறார். கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்பதாக. அதுபோல, என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன் என்றும் என் பாத ஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன் என்றும் கர்த்தர் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.
கர்த்தருடைய மகிமை நம்முடைய சபைகளில் வெளிப்படுவதற்கு, பரலோக மாதிரியின்படி நாம் ஒவ்வொரு காரியங்களையும் செய்ய வேண்டும். தேவ மகிமை வெளிப்படுவதைப் போலக் காண்பிப்பதற்கு செயற்கை முறைகளைப் பயன்படுத்தாமல், கர்த்தருடைய வசனத்தின்படி ஒவ்வொரு காரியங்களையும் செய்யப் பழகிக் கொள்ளவேண்டும். பரலோகத்தில் உம்முடைய சித்தம் செய்யப்படுவதைப் போல, பூமியில் எங்கள் வாழ்க்கையிலும் செய்யப்படுவதாக என்பதையே திரும்பத் திரும்ப வெறுமனே சொல்லிக் கொண்டிராமல், பரலோகச் சித்தத்தை அறிந்து, அதன்படி ஒவ்வொரு காரியங்களையும் செய்கிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும். அப்போது கர்த்தருடைய மகிமை நம்மையும், நம்முடைய சபைகளையும் நிரப்பும்.
சீனாய் மலையில் கர்த்தருடைய மகிமை இறங்குவதற்கு, கர்த்தர் மோசேயிடம், நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து, அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப் பட்டிருக்கக்கடவர்கள், மூன்றாம் நாளில் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவேன் என்றார். அவ்வண்ணமாக ஜனங்கள் தங்களைப் பரிசுத்தம் செய்த வேளையில், கர்த்தருடைய மகிமை சீனாய் மலையில் இறங்கினது, அதை அவர்கள் கண்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆலயத்தின் அலங்காரமும், பிரமாணமும் பரிசுத்தமாய் காணப்படுகிறது. ஊழியர்களும், விசுவாசிகளும் பரிசுத்தத்தை அதிகமாய் வாஞ்சிக்கும் போது, தேவ மகிமை வெளிப்படும், அதை நீங்கள் கண்ணாரக் காண்பீர்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் பரிசுத்தாவியின் பிரசன்னம் இறங்குவதற்கு எருசலேமில் காத்திருக்கும் படிக்குத் தன்னுடைய சீஷர்களிடம் கூறினார். அவர்கள் மேல்வீட்டறையில் காத்திருந்த வேளையில் பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னமும், மகிமையும் இறங்கி அவர்களை நிரப்பினது. கர்த்தருடைய பிள்ளைகளே, மேகமாய் இறங்கும் கர்த்தருடைய பிரசன்னம், அவருடைய ஆலயமாகிய நம்முடைய சரீரத்தையும், நாம் கூடி ஆராதிக்கிற சபைகளையும் இந்நாட்களில் அதிகமாய் நிரப்புவதற்கு, வசனத்தின்படி ஒவ்வொரு கரியங்களையும் செய்வோம், அவ்வாறு செய்யும் போது அவருடைய பிரசன்னமும், சமூகமும் உங்களை வாழ வைக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

