அப்பொழுது இயேசு: அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார் (லூக்கா 24:17).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2xbdL6k1RQM
உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் பண்டிகைக் காலங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தரும்படிக்கு ஜெபிக்கிறேன். இயேசு உயிர்த்தெழுந்த அன்றைய தினம் இயேசுவைப் பின்பற்றினவர்களில் இரண்டு பேர் எருசலேமிலிருந்து ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில் காணப்பட்ட எம்மாவூர் என்ற கிராமத்திற்குப் போனார்கள். அவர்கள் பிரயாணம் செய்கையில் துக்க முகங்களோடு காணப்பட்டார்கள். இயேசு அவர்களை ரோமர்களுடைய கையிலிருந்து மீட்டு ரட்சிப்பார் என்று நம்பியிருந்தார்கள், இப்பொழுது நம்பிக்கை முழுவதும் இழந்து போனார்கள், இயேசுவை பின்பற்றிச் சென்றோம், அவர் இப்போது மரித்துப் போனார், இனி நம்முடைய எதிர்காலம் என்ன, இவ்வளவு நாட்களை வீணடித்து விட்டோமே என்று அவநம்பிக்கையின் வார்த்தைகளை அவர்கள் பேசியிருக்கக் கூடும். கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த எம்மாவூர் சீஷர்களைப் போல நீங்கள் காணப்படுகிறீர்களா? பல வருடங்களாய் இயேசுவை பின்பற்றுகிறேன், நன்மையைக் காணமுடியவில்லை என்று சோர்ந்து போய், நம்பிக்கையை இழந்து, பின்னிட்டு நடக்கிறவர்களாய் காணப்படுகிறீர்களா? ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை இன்றைக்கு உங்களை உயிர்ப்பிக்கிறது.
அவர்கள் அவ்வண்ணமாகப் பேசிக்கொண்டு செல்கையில், உயிர்த்தெழுந்த இயேசு அவர்களோடு இணைந்து கொண்டார். அவர்களுடைய அவநம்பிக்கையும், அவ்விசுவாசமும் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளுவதைக் கூட மறைத்து விட்டது. இயேசுவை அந்நியரைப் போல பார்த்தார்கள். இவர்களுடைய பின்மாற்றத்திற்குக் முக்கியக் காரணம், இயேசு ஊழியத்தின் நாட்களில் அவர்களிடம் தான் பாடுபடவேண்டும் என்றும், மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்றும் அவர் கூறியதை மறந்துவிட்டார்கள். மோசே முதற்கொண்டு அவரைக் குறித்து எழுதிய சகல தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளக் கூடாதபடிக்கு சத்துரு அவர்கள் இருதயத்தை மந்தமாக்கிவிட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, வேத வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் காணப்படுகிறது. அவைகள் உங்களை உயிர்ப்பிக்க வல்லமையுள்ளது. நீங்கள் வசனத்தின் வெளிச்சத்தில் ஆண்டவரை அறியாமல் காணப்படும் போது, நீங்கள் ஏமாற்றப்படலாம், வஞ்சிக்கப்படலாம், பின் மாற்றத்திற்குள் போய் சோர்ந்து போகிறவர்களாய் கூட காணப்படலாம்.
அவர்கள் செல்ல வேண்டிய கிராமம் வந்தவுடன், இயேசு தன்னை அப்புறம் போகிறவர் போகிறவர் போல அந்நியராய்க் காட்டிக் கொண்டார். ஆனால் அவர்கள் தங்களோடு தங்கும் படிக்கு அவரிடம் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். ஆகையால் விருந்தினராய் வந்தவரே அப்பத்தை எடுத்துப் பிட்டு ஆசீர்வதித்து அவர்களுக்குக் கொடுத்த வேளையில் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை இயேசு என்று அறிந்தார்கள். இயேசுவின் கரங்களில் காணப்பட்ட ஆணிகளினால் உண்டான வடுக்களை ஒருவேளை அவர்கள் கண்டிருக்கக் கூடும். கர்த்தருடைய பிள்ளைகளே! ஆண்டவரோடு காணப்படுகிற ஐக்கியத்தை இழந்து விடாதிருங்கள். அவர் உங்களை விட்டு அப்புறம் போக அனுமதித்து விடாதிருங்கள். இளையகுமாரனைப் போல அப்பாவின் அன்பை அசட்டைச் செய்துவிடாதிருங்கள். அவர் பகிர்ந்தளிக்கும் அப்பத்தையும் ரசத்தையும் உங்களுக்கென்று அவர் கொடுத்திருக்கிற சபையின் பந்தியில் பெற்றுக் கொள்ளுங்கள். அவருடைய சமூகமும் பிரசன்னமும் உங்களை உயிர்ப்பிக்கும், அவருடைய காயங்களிலிருந்து வழிந்த இரத்தம் உங்களை பாவங்களற கழுவி, உயிர்ப்பிக்கும். மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடிருக்கிறேன் என்றவர், அவருடைய கரங்களை உயர்த்தி, உங்களை ஆசீர்வதித்து என்றென்றைக்கும் ஜெயமாக நடத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

