கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும? (How to Serve the Lord?)

அப் 20:19 வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/U5So9Yb2S3c

கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும் என்ற அப்போஸ்தலன் பவுலின் சாட்சிதான் மேற்குறிப்பிட்ட வசனம். முதலாவது, அவன் மனத்தாழ்மையுடன் கர்த்தரை சேவித்தான். தேவனுடைய பணியைச் செய்ய நாம் தகுதியானவர்கள் அல்ல, அவருடைய கிருபையே நம்மை அவர் பணி செய்ய உந்துகிறது என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். எசேக்கியா ராஜாவின் சாட்சியைப் பாருங்கள். நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன் என்று ஏசாயா 38:5-ல் கூறுகிறான். நாமும் நம்மை ஆண்டவர் எந்த நிலையிலிருந்து உயர்த்தினார் என்ற தாழ்மையின் சிந்தையோடு கர்த்தரை சேவிக்க வேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய பெயர் பிரஸ்தாபத்திற்காக அல்ல, தாழ்மையோடு கர்த்தரை சேவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, மிகுந்த கண்ணீரோடு சேவித்தான். இயேசு சொன்னார் உங்களுக்காக நீங்கள் அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்பதாக. லாசரு மரித்தபோது இயேசு கண்ணீர் விட்டார். கண்ணீரோடு ஜெபிப்பதையும், கண்ணீரோடு கர்த்தரை சேவிப்பதையும், பவுல் இயேசுவிடம் கற்றுக்கொண்டான். மாத்திரமல்ல, கண்ணீரோடு ஊழியம் செய்ய பவுல் தன்னுடைய விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு கற்றுக்கொடுத்தான். உன் கண்ணீரை ஞாபகம்பண்ணுகிறேன் என்று 2 தீமோ 1:3-ல் பவுல் தீமோத்தேயுவைக்குறித்து சொல்லுகிறான். பழைய ஏற்பாட்டு புஸ்தகத்திலும் பாருங்கள் நெகேமியா அழுதான், எஸ்றா அழுதான், எஸ்தரும் அழுதாள். இவர்களெல்லாம் கண்ணீர் சிந்தியே கர்த்தரை சேவித்தார்கள். இன்றைக்கு அநேக சபைகளில் சடங்காச்சாரங்களும், பொழுதுபோக்குகளும் கூடிவிட்டது. கண்ணீரோடு கர்த்தரை சேவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துபோய்விட்டது. நாம் கண்ணீரோடு கர்த்தரை சேவிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

மூன்றாவதாக, தனக்கு நேரிட்ட சோதனைகளின் மத்தியிலும் கர்த்தரை சேவித்தான். பவுல் சந்தித்த ஆபத்துகள் கொஞ்சமல்ல. கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதை மாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன் என்று தைரியமாக சொன்னான். வரும் நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு சோதனைகள் அதிகமாக வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கர்த்தரை சேவிப்பதில் உறுதியாக காணப்பட வேண்டும்.

நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்று யோசுவா 24:15 கூறுகிறது. எப்படி கர்த்தரை சேவிப்பது என்பதை அப் 20:19 கூறுகிறது. அப்போஸ்தலன் பவுலைப் போல கர்த்தரை சேவியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org