2 சாமு 22 : 26 , 27 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hhsNz5sqTK0
தேவன் தயவுள்ளவர். ஆகையால் எல்லாரும் தேவனிடம் தயவை எதிர்பார்ப்பார்கள். அதேவேளையில் நீங்கள் மற்ற நபர்களுக்கு தயவை காட்டாமல் தேவனிடம் தயவை எதிர்பார்த்தால் அது ஏமாற்றத்தில் தான் கொண்டுபோய்விடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஒரு எஜமானிடம் ஒரு ஊழியக்காரன் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தான். அந்த ஊழியக்காரனால் கடனை செலுத்தி தீர்க்க முடியவில்லை. அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். இப்பொழுது எஜமான் அந்த ஊழியக்காரனுக்கு தன்னுடைய தயவை, இரக்கத்தை காண்பித்தான். தயவை பெற்றுக்கொண்ட ஊழியக்காரனிடம் வேறொருவன் வெறும் 100 ரூபாய் தான் கடன்வாங்கியிருந்தான். அவனாலும் கடனை செலுத்தி தீர்க்க முடியவில்லை. ஊழியக்காரனோ, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். மாத்திரமல்ல, அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். இந்த ஊழியக்காரன் பிறனுக்கு தயவை காண்பிக்கவில்லை என்பதை எஜமான் அறிந்து, அவனிடம் வந்து நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான் என்ற உவமையை இயேசு கூறினார்.
அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் மன்னியாமல் விட்டுவிடுவார் என்று இயேசு சொன்னார். தேவனிடம் தயவை எதிர்பாருங்கள். அவருடைய தயவு தான் நம்மை பெரியவனாக்கும். அவற்றில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதற்கு முன்பாக நீங்களும் தயவுள்ளவர்களாக இருங்கள். காரணம் அவர் தயவுள்ளவனுக்கு தான் தயவுள்ளவர். உத்தமனுக்கு தான் அவர் உத்தமர். யோபு உத்தமன் என்று வேதம் அவனை குறித்து சொல்லுகிறது. ஆண்டவரும் அவனை திரும்ப ஆசீர்வதிப்பதில் உத்தமத்தை காத்துக்கொண்டார். மாத்திரமல்ல, அவர் புனிதனுக்கு தான் அவர் புனிதர். யோசேப்பு தன்னுடைய நடக்கையெல்லாவற்றிலும் பரிசுத்தத்தை காத்துக்கொண்டான். ஆகையால் பரிசுத்தமுள்ள தேவன் யோசேப்போடுகூட இருந்தார். கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
கடைசியில் அவர் மாறுபாடானவனுக்கு மாறுபடுகிறவராகவும் இருக்கிறார். நம்முடைய ஆண்டவருக்கு முன் வெளிவேஷம் தரித்து அவரை ஏமாற்றலாம் என்று முயற்சிக்காதிருங்கள். அவரை யாராலும் ஏமாற்றமுடியாது. அவரிடம் நீங்கள் மாறுபாடாக செயல்பட்டால், அவரும் மாறுபடுகிறவராக காண்பிப்பார் என்ற எச்சரிக்கையும் எடுத்துக்கொள்ளுங்கள். பாவத்தை தண்ணீரை போல பருகுகிறவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வெளிப்படும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். ஆகையால் நீங்கள் தேவனிடம் எதிர்பார்ப்பதை மற்றவர்களுக்கும் செய்ய பழகிக்கொள்ளுங்கள். அப்போழுது கர்த்தர் உங்களுக்குமுன்பாக தன்னுடைய தயவையெல்லாம் கடந்து போகும்படி செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

