தலைவன் (Ruler / Leader)

1 சாமு 22 : 2 ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OVvwTCxfCKw

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீது தலைவனாக உருவாக்கப்படுகிறான். ஆமான், அகித்தோப்பேல் போன்றோர் போல, குறிப்பிட்ட துறைகளில் சத்துருவால் தெரிந்துகொள்ளப்படுகிற தலைவர்கள் காணப்படுவதுண்டு, ஆனால், தாவீது தேவன் தெரிந்துகொண்ட தலைவன்.

பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், இராஜாக்கள் இவர்கள் மூன்று பேரும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். எலிசா தீர்க்கதரிசி அபிஷேகம் பண்ணப்பட்டான். “சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு” என்று தேவன் எலியா தீர்க்கதரிசியிடம் கூறினார் (1 இராஜா 19:16). ஆசாரியனாகிய ஆரோன் அபிஷேகம் பண்ணப்பட்டான். யாத் 28:41 கூறுகிறது, “உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக” என்பதாக. இராஜாவாகிய சவுல் அபிஷேகம் பண்ணப்பட்டவன். அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: “கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா?” என்று 1 சாமு 10:1 கூறுகிறது. இப்படி தலைவனுக்குரிய அபிஷேகத்தை சவுல் பெற்றிருந்தான். ஆனால் அவன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதில் தவறியதால், தலைவனுக்குரிய இடத்தை கர்த்தர் தன்னுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதுக்கு கொடுத்தார். “கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே” என்றார்கள் என்று 2 சாமு 5:2 கூறுகிறது.

தாவீது கடினமாக உழைத்து தனக்குக் கொடுக்கப்பட்ட தலைவனுக்குரிய அபிஷேகத்தைத் தக்கவைத்துக்கொண்டான். கர்த்தருடைய பிள்ளைகளும் தாங்கள் வேலை செய்கிற இடங்களில் திறம்பட உழைத்து தலைவனுக்குரிய இடத்தை தக்கவைக்க வேண்டும். தானியேலை பாருங்கள், அவன் மற்றவர்களை விட பத்து மடங்கு வேலையில் சமர்த்தனனாக இருந்தான். பெசலெயேல் திறம்பட வேலை செய்ய ஞானத்தின் ஆவியைப் பெற்றுக்கொண்டான். நாமும் கர்த்தரிடம் ஞானத்தின் ஆவியைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன் என்று நீதி 18:9 எச்சரிக்கிறது. அநேக இடங்களில் வேலை நேரத்தில் வீணாக அரட்டை பேசி தங்களுடைய செயல்திறனை வீணடித்துவிடுகிறார்கள். “சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்” என்று நீதி 14:23 கூறுகிறது. ஆகையால், ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த பணியைத் திறம்பட செய்து தலைவனுக்குரிய இடத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தருடைய பிள்ளைகள் ஆண்டவரிடம் கேளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org