இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு, மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக(யாத். 25:2).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/AK7DPa6prG4
வேதத்தில் முதன்முதலாகக் கர்த்தர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார் என்று ஆதி.4:4ல் எழுதப்பட்டிருக்கிறது. அங்கே, காயீன் மற்றும் ஆபேலிடம் கர்த்தர் காணிக்கையைக் கொண்டு வரும்படிக்குச் சொல்லவில்லை, அவர்களாகவே கொண்டுவந்தார்கள். அவர்களில் ஒருவனாகிய ஆபேல் மனப்பூர்வ மனதோடும், மகிழ்ச்சியோடும் கொண்டு வந்தான், ஆகையால் கர்த்தர் அவனையும், அவனுடைய காணிக்கையை அங்கீகரித்தார். அதன்பின்பு, போரில் விடாய்த்து வந்த ஆபிராமுக்கு, மெல்கிசேதேக்கு அப்பத்தையும் திராட்சைரசத்தையும் கொண்டுவந்து கொடுத்தான். அப்போது ஆபிராம், மெல்கிசேதேக்கு ஒன்றையும் தன்னிடத்தில் கேட்காமலிருந்தும், அவனாகவே மனப்பூர்வ மனதுடனும், உற்சாகத்துடனும் தன்னிடம் காணப்பட்ட எல்லாவற்றிலும் அவனுக்கு தசம பாகத்தைக் கொடுத்தான். இந்த மெல்கிசேதேக்கு இயேசுவுக்கு அடையாளமானவன் என்று எபிரேய நிருபம் கூறுகிறது. அடுத்ததாக, யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவுக்கு பயந்து, தகப்பனாகிய ஈசாக்கின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்து தன் தாயின் வம்சத்திலிருந்து தனக்குப் பெண் கொள்ள, பெயர்செபாவை விட்டு ஆரானுக்குப் போனான். போகும் வழியில் பெத்தேலில் வந்த போது சூரியன் அஸ்தமித்த படியினால் வனாந்தரத்தில் ஒரு கல்லை எடுத்து தலையணையாக்கிப் படுத்துக் கொண்டான். கர்த்தர் அவனுக்குச் சொப்பனத்தில் தோன்றி, அனேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். அப்பொழுது யாக்கோபு ஒருகல்லை எடுத்து தூணாக நிறுத்தி இது உமக்கு வீடாகும் என்றும், தேவரீர் எனக்கு தரும் எல்லாவற்றிலும் தசம பாகத்தைத் தருவேன் என்று நன்றி நிறைந்த மனதுடன் வாக்களித்தான். இருபது வருடங்களுக்குப் பின்பு அதே இடத்தில் வந்து அதை நிறைவேற்றினான். இவை அனைத்தும் கர்த்தர் கேளாதபடி, முற்பிதாக்கள் மனப்பூர்வ இருதயத்தோடும், உற்சாக மனதோடும் கர்த்தருக்கென்று செய்தவையாய் காணப்படுகிறது.
தேவன் முதல்முதலாக மோசேயிடம், இஸ்ரவேல் சபையிடம் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு என்றும், மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவனிடத்தில் மாத்திரம் அதை வாங்கு என்றும் யாத். 25:2ல் கூறினார். அவர்கள் நடுவில் அவர் தங்கி வாசம் பண்ணுவதற்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டவேண்டும், அந்த ஆலய வேலைக்காகக் காணிக்கையை வாங்கும் படிக்குச் சொன்னார். எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து அவர்களை விடுதலையாக்கி, எகிப்தின் செல்வங்களையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்து, ஒரு தகப்பனைப் போலப் போஷித்து, பராமரித்து வனாந்தரத்தில் நடத்திக் கொண்டு வந்த தன்னுடைய ஜனங்கள் நன்றியறிதல் உடையவர்களாய் காணப்படுகிறார்களா என்பதை சோதிக்குப்படிக்கும் அவர் அவ்வாறு கூறியிருக்கக்கூடும். ஜனங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களை, மோசே போதும் என்று சொல்லுகிற அளவிற்குக் கொண்டுவந்தார்கள் என்று யாத். 36:5,6 கூறுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருக்காக எதைச் செய்தாலும் மனப்பூர்வ மனதுடனும், உற்சாக ஆவியுடனும் செய்யுங்கள். அனனியா, சப்பீரா என்ற குடும்பத்தைப் போல மனமகிழ்ச்சியில்லாதபடி, பாரத்தோடும் துக்கத்தோடும் ஒன்றையும் செய்யாதிருங்கள், அது உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதில்லை. அப்போஸ்தலனாகிய பவுலும் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது, யாத். 25:2ஐ மனதில் வைத்துக்கொண்டு, தானதர்மமாயிருந்தாலும், காணிக்கையாயிருந்தாலும் உற்சாக மனதோடு அதைச் செய்யுங்கள் என்றும், அப்படிச் செய்கிறவர்களிடம் கர்த்தர் பிரியமாயிருக்கிறார் என்றும் எழுதினார். இன்று அனேக ஊழியர்கள் அது தானதர்மத்தைப்பற்றியது மட்டுமே என்றும், காணிக்கையைப் பற்றியதல்ல என்றும் கூறி, சபைமக்களுக்கு இடறுதலாய் காணப்படுகிறார்கள். பல அரசாங்கங்கள் சுவிஷேச ஊழியங்களுக்கும், நிறுவனங்களுக்கும் வருகிற உதவிகளைத் தடைசெய்கிற இந்நாட்களில், இப்படிப்பட்டவர்களும் அவர்களோடு சேர்ந்து சத்துருவுக்கு ஊழியம் செய்கிறார்கள். நாம் கர்த்தரிடத்திலிருந்து நன்மைகளைப் பெறுகிறவர்களாய் மட்டுமல்ல, பெற்ற நன்மைகளை விதைக்கிறவர்களாகவும் இருப்போம், அப்போது கர்த்தருடைய பிரியம் உங்கள் மேல் இருக்கும், நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

