நல்ல ஒரு கேள்வி (A good question)

மாற் 10:17. பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Hqky2tw9ad4

ஒரு பணக்கார இளைஞன் மிகுந்த ஆர்வத்துடன் கர்த்தரிடம் வந்தான், ஆனால் ஏமாற்றமடைந்து சென்றான். அவன் ஒரு விதிவிலக்கான இளைஞன், ஏனென்றால் அவன் கர்த்தரிடம் ஓடி வந்து, முழங்கால் படியிட்டு, தன் மனத்தாழ்மையை வெளிப்படுத்தினான். மாத்திரமல்ல, அவனுடைய கேள்வி இளைஞர்களிடையே அரிதான, ஒருவேளை இளம் பணக்காரர்களிடையே அரிதான கேள்வியாய் இருந்தது. இந்நாட்களில் இருக்கும் பணக்காரர்கள் மிகுதியானோர் என்ன கேட்பார்கள்? இன்னும் செல்வம் வேண்டும், இன்னும் தொழில் வளரவேண்டும், இன்னும் வசதியான வாகனம் வாங்கவேண்டும், இன்னும் பெரிய வீடு கட்ட வேண்டும் என்று தான் கேட்பார்கள். ஆனால் இவன் கேட்ட கேள்வி ஒரு நல்ல கேள்வி. இவன் நித்தியஜீவனை சுதந்தரிக்க நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். இந்த கேள்வி நம் எல்லாருக்கும் காணப்படவேண்டும்.

இயேசு அவனிடம் கட்டளைகளை பற்றிப் பேசியபோது, ​​அவற்றையெல்லாம் கடைப்பிடித்ததாக அவன் தயக்கமின்றி பதிலளித்தான். அவன் ஒருபோதும் விபச்சாரம் செய்யவில்லை, ஒருபோதும் கொல்லவில்லை, ஒருபோதும் திருடவில்லை, ஒருபோதும் பொய் சாட்சி சொல்லவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை, தன் தந்தையையோ தாயையோ அவமதிக்கவில்லை. அவன் ஒரு குறிப்பிடத்தக்க இளைஞன், நேர்மையானவன், ஒழுக்கமானவன்,என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் இயேசு பின்னர் அவனுடைய வாழ்க்கையில் இல்லாத ஒரு விஷயத்தில் தனது விரலை வைத்தார். அது இல்லாமல் அவனது மற்ற அனைத்து தகுதிகளும் பயனற்றவை. பொருள் உடைமை ஆஸ்தி செழிப்பு மீதான பற்றுதலால், சிலுவையை எடுத்துக்கொண்டு கர்த்தரை பின்பற்ற அவன் விரும்பவில்லை. அவன் கேட்ட கேள்வி நல்ல கேள்வி தான். அவன் நித்தியஜீவனை சுதந்தரிக்க வாஞ்சையுள்ளவனாக காணப்பட்டான். ஆனால், இயேசு அவனுடைய வாழ்க்கையில் பழுதடைந்த பாகத்தை சரி செய்ய அவன் விட்டுக்கொடுக்கவில்லை.

இப்படி நித்திய ஜீவனை பற்றி கேட்கிறவர்கள் அநேகர். பரிதாபம், அதற்கு செவி சாய்த்து தங்கள் வாழ்க்கையை அர்பணிப்பவர்களோ சொற்பமான ஜனங்கள் மாத்திரமே என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. ஆனால் வெறும் பணம் பணம் என்று மாத்திரமே ஓடி நித்தியதை இழந்துபோய்விடாதீர்கள். ஒரு ஊருக்கு செல்லும்போது நாம் தாமதமாக வரும்போது, பேருந்தையோ அல்லது இரயில் வண்டியையோ தவற விட்டால், நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. சாதாரண பேருந்தை தவறவிட்டபோதே, நம்முடைய மனம் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நித்தியதை தவறவிட்டோம் என்றால் நம்முடைய சூழ்நிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். கடந்த நாட்களில் தீபாவளி பண்டிகைக்கு USA விலிருந்து வர, ஒரு நாள் முன்பாக அநேகர் ஆயத்தமானர்கள். அவர்கள் பயணிக்கும் விமானம் தற்செயலாக பழுதடைந்துவிட்டது. ஆகையால் அந்த பண்டிகையில் தங்கள் உறவினர்களோடு நண்பர்களோடு மகிழ்ச்சியோடு இருக்க அவர்கள் போட்ட திட்டமெல்லாம் பாழாய்போனது. எல்லாரும் ஏமாற்றத்தில் சோர்வடைந்துவிட்டார்கள். சாதாரண ஒரு பண்டிகையை தவற விடும்போதே இவ்வளவு சோர்வு மனிதனுக்கு வருமென்றால், நித்தியதை தவற விடுவோமென்றால், நமக்கு வரும் சோர்வுக்கும் அழுகைக்கும் அளவே இருக்காது. ஆகையால் நாம் வாழும் இந்நாட்களில், இயேசுவின் சித்தம் அறிந்து, அவருக்கே முதலிடம் கொடுத்து, எஜமானின் சத்தம் கேட்டு அதன்படி செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள். நித்தியஜீவனை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *