மன்னித்துவிடுவார் (He will forgive)

சங் 86 : 5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/p4yQ_WhHpBY

பின்மாற்றத்திலிருக்கும் ஜனங்கள் பின்மாற்றத்திலேயே மடிவது ஆண்டவருடைய சித்தமல்ல. ஒருவேளை நீங்கள் பின்மாற்றத்தில் இருக்கிறீர்களா என்று தெரியாமல் அந்த அறிவு இல்லாமல் இருப்பீர்களென்றால், பின்மாற்றத்திற்குரிய அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். பின்மாற்றத்திற்கான அறிகுறிகள், பாவம் செய்வது பழகிப்போயிருக்கும், ஜெப வாழ்விலும் வசனம் தியானிக்கும் வாழ்விலும் ஆர்வம் குறைந்திருக்கும், திருப்தியும் தேக்கமும் வாழ்வில் காணப்படும். இவைகளில் ஏதாவது அறிகுறிகள் உங்கள் வாழ்வில் தென்படுகிறதா? அப்படியென்றால், நீங்கள் விழித்துக்கொள்ளவேண்டிய முக்கியமான கட்டத்தில் இருக்கிறீர்கள்.

பின்மாற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நமக்கு இயேசுவே வழி என்பதை அறிந்துகொள்ள வேண்டும். யூதாஸ் ஸ்காரியோத்து பாவம் செய்து இயேசுவிடம் வருவதற்கு பதிலாக மனிதர்களிடம் ஓடினான். பின்பு நாண்டு கொண்டு செத்தான். பேதுருவும் பாவம் செய்தான், ஆனால் அவன் மனம் திரும்பி இயேசுவிடம் வந்தான். இயேசுவிடம் வருகிறவர்களுக்கு மன்னிப்பு உண்டு. காரணம் அவர் மன்னிக்கிறவர்.

யோவான் 6:37-ல் இயேசு வாக்கு கொடுக்கிறார், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்பதாக. உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும் என்றும் ஏசாயா 1:18-ல் வாக்குக்கொடுக்கிறார். அதுபோலத்தான் மேற்குறிப்பிட்ட வசனத்தின்படி, அவர் நல்லவரும், மன்னிக்கிறவருமாயிருக்கிறார். இயேசு நம்மை மன்னிக்கும்போது போனால் போகட்டும் என்று கடமைக்கென்று மன்னிப்பதில்லை. மாறாக, அவர் கிருபையை நம்மேல் பொழிந்து மன்னிக்கிறவராய் இருக்கிறார். சங்கீதம் 86:13 கூறுகிறது, நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர் என்பதாக. இளைய குமாரன் மீண்டும் தகப்பன் வீட்டுக்கு வந்தபோது தகப்பன் அன்போடு அவன் பாவத்தை நினையாமல், கட்டி அணைத்துக்கொண்டான் என்று வேதத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளுகிறோம். அதுபோலத்தான், பின்மாற்றத்திலிருந்தாலும் இன்று இயேசுவிடம் வந்துவிடுங்கள். அவர் உங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுவார். சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது, பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று சொன்னாரே, நிச்சயமாகவே, அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *