தேவன் பூமியனைத்திற்கும் ராஜா (God is the King of all the earth)

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா, கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள் (சங். 47:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UdkZp8lw0Tk

நாம் ஆராதிக்கும் தேவன் பூமியனைத்திற்கும் ராஜா, அவரே ஆளுகை செய்கிறவர். பூமியில் காணப்படுகிற குறிப்பிட்ட தேசங்களை ஆளுவதற்கு ஜனாதிபதிகளும், பிரதம மந்திரிகளும், முதல் மந்திரிகளும், ராஜாக்களும், சர்வாதிகாரிகளும் காணப்படலாம். அவர்கள், கர்த்தர் குறித்த  சில காலங்கள் ஆளுகையில் இருப்பார்கள், நிரந்தரமாய்   ஆளுகையில் இருக்க முடியாது. அந்த குறிப்பிட்ட காலங்களில் சிலர் நல்லாட்சி புரிவார்கள், சிலர் துன்மார்க்கமான ஆட்சி செய்வார்கள். சிலர் தன் குடிகளுக்கு முன்மாதிரியாய் காணப்படுவார்கள், சிலர் தவறான முன்மாதிரியை வைப்பார்கள்;. சிலர் குடும்ப வாழ்க்கையில் பரிசுத்தமாய் காணப்படுவார்கள், சிலர் மாம்சீக பாவங்களில் காணப்படுவார்கள். சிலர் தங்களிடம் காணப்படுகிற அதிகாரங்களைத்  துஷ்பிரயோகம் செய்து,  அனேகரைக் கொன்று குவித்து, நாங்கள் தான் என்றைக்கும் ஆளுகையில் இருப்போம் என்ற அகந்தையில்   காணப்படுவார்கள். நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள், துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள் என்று நீதி. 29:2 கூறுகிறது.

அதுபோல ஒவ்வொரு பிராந்தியங்களுக்கும் (Territorial gods) குறிப்பிட்ட தெய்வங்கள் காணப்படுவதுண்டு. பாகால், மோளேக்,  அஸ்தரோத்,  தாகோன், தீனாள் என்று பல புறஜாதிகளின் தெய்வங்களைக் குறித்து வேதத்தில்  எழுதப்பட்டுள்ளது. அவைகள் எல்லாம் குறிப்பிட்ட பகுதியின் தெய்வங்களாய்க் காணப்பட்டு, அந்தப் பகுதியைக் கட்டிக்காக்கிறதாய்  காணப்படும். சாத்தான் கூட ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பிசாசை அதிபதியாய் வைத்து ஆளுகைச் செய்கிறான். ஆனால், இவைகள்  எல்லாம் பூமியனைத்திற்கும் ராஜாவாகிய கர்த்தரின் ஆளுகையின் கீழ்க் காணப்படுகிறது. இயேசு மட்டுமே எங்கும் எப்போதும் நிறைந்திருக்கிறவர். அவர் ஒருவரே பூமியனைத்தையும் ஒருமித்து ஆளுகைச் செய்கிறவர்.

தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார், தேவன் தமது பரிசுத்தச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார் என்று அடுத்த வசனம் சங். 47:8 கூறுகிறது. அவருடைய சிங்காசனம் மட்டும் நிரந்தரமானது. ஆகையால் பூமியில் காணப்படுகிற ஆட்சி அதிகாரங்களைக் குறித்து அதிகமாய்க் கவலைப்படாதபடி அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். இந்நாட்களில் காணப்படுகிற பரிதாபகரமான நிலை என்னவென்றால்,  குடும்ப வாழ்க்கையில் தோற்றுப் போய், பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நபர்களை,   மேற்குலக நாட்டின் குடிகள் தங்கள் தலைவர்களாய் ஏற்றுக் கொள்ளுவதைப் போல, கீழ்த்தேசத்தின் குடிகளும் ஏற்றுக் கொள்ளத் துவங்கி விட்டார்கள். சபை மக்களும் மாம்சீக பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஆராதனை தலைவர்களையும், போதகர்களையும் ஏற்றுக் கொண்டு, தலைவர்களாய் அங்கீகரித்து, பெருங்கூட்டமாகச் செல்லுகிறார்கள். பாவத்தை ஒரு பொருட்டாகவே கருதாத ஜனங்களை உலகத்திலும், கிறிஸ்தவத்திலும் பார்க்க முடிகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, பூமியனைத்தையும் ஆளுகைச் செய்கிற நம்முடைய ராஜா மகா பரிசுத்தமுள்ளவர்.  அவர் உன்னதமானவர், பயங்கரமானவர், மகத்துவமானவர். ஆகையால் அவரை கருத்தோடு பாடிப் போற்றுங்கள், பயத்துடனே களிகூருங்கள், பரிசுத்த அலங்காரத்தோடு தொழுது கொள்ளுங்கள். அப்போது, அவர் உங்கள் வாழ்க்கையின் ராஜாவாயிருந்து, உங்களை மேன்மையாய் நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *