நன்மையை புசிப்பீர்கள் (You will eat goodness.)

நீதி 13 : 2 மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/MwNZGC9UH4M

நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்ற நடைமுறைச் சொல் இருக்கிறது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்றும், தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிப்பான் என்றும் பழமொழி இருக்கிறது. அதுபோல வேதம் சொல்லுகிறது, நாம் நம்முடைய நாவினால் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். நாம் நம் நாவினால் வார்த்தைகளை விதைக்கிறோம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் விதைகளைப் போலப் பார்க்க வேண்டும். விதைப்பவன் ஒருவன் விதைகளை விதைப்பதைப் போல, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் விதைகள். நாள் முழுவதும், நான் விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கட்டும். உங்கள் வீட்டில், உங்கள் அலுவலகத்தில், தேவாலயத்தில், பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விதை, அது ஒருமுறை வெளியே சென்றுவிட்டால், உங்களால் அதைத் திரும்பப் பெற முடியாது. பேசின பொல்லாத வார்த்தைக்காக மனந்திரும்பலாம், ஆனால் அதைத் திரும்பப் பெற முடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள். எப்படி ஒரு டம்ளரிலிருந்து (குவளை) கீழே கொட்டப்பட்ட தண்ணீரை மீண்டும் டம்ளரில் சேர்க்க முடியாதோ, அதுபோல தவறாகப் பேசப்பட்ட வார்த்தையையும் திரும்பப் பெற முடியாது. விதைக்கிற வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்கிறவர்கள், இயல்பாகவே இறுதியில் நன்மையை அறுப்பார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வார்த்தைகளை ஞானமாக விதைப்பவர்கள் நன்மையையும் சமாதானத்தையும் அறுக்கிறார்கள். அதேசமயம் ஒரு துன்மார்க்கன், ஒரு பொல்லாதவன், சண்டையிட மட்டுமே விரும்புகிறான். சண்டையை உண்டாக்கும் எதையாவது விதைக்க உங்கள் நாவு தயாராக இருக்கிறது என்றால் அது ஒரு பொல்லாதவனின் அடையாளம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

விதை விதைப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? உதாரணத்திற்கு தக்காளி கிடைக்கும்படி விதைப்பவர்கள், விதைத்தவுடன் மறுநாளிலேயே தக்காளியைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். விதைத்த விதைகள் வளர்ந்து கனி கொடுக்க சில காலம் பொறுமையாய் இருக்க வேண்டியது அவசியம். அதுபோல தான் கர்த்தருடைய வசனத்தின்படி விசுவாச வார்த்தைகளை உங்கள் வீட்டிலும், உங்கள் வேலையிலும், உங்கள் பிள்ளைகள் குடும்பத்தின் மீதும் பேசுங்கள். உங்கள் விசுவாச வார்த்தை நாட்களாகும்போது பலன் கொடுப்பதை பார்ப்பீர்கள். ஏற்றசமயத்தில் உங்கள் வாயின் பலனால் நீங்கள் நன்மையை புசிப்பீர்கள்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *