நம்மையே தியாகம்பண்ணுதல் (Sacrificing ourselves)

எஸ்தர் 4 : 16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oSFtSbr8Ad0

தியாகம் என்பது நாம் அதிகமாய் நேசிக்கும், மதிக்கும் ஒரு காரியத்தைத் துறந்துவிடுவது என்று அர்த்தமாகக் காணப்படுகிறது. அதுபோல, எஸ்தர் யூத ஜனங்களின் வாழ்வுக்காகத் தான் மரித்தாலும் பரவாயில்லை என்று தன்னையே தியாகமாக அர்ப்பணிக்கிறவளாய் காணப்பட்டாள்.

இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயின் நாட்களில், பொன்னினால் உண்டான தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்தார்கள். அப்பொழுது மோசே, ‘அவர்களுடைய பாவத்தை மன்னிக்கும்படியாக ஜெபிக்கிறான்; தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்’ என்றான் (யாத் 32:31). இது மோசேயின் தியாகம்.

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரி சபைக்கு எழுதும்போது, ‘மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே’ (ரோம 9:3) என்று கூறுகிறான். இது அப்போஸ்தலனாகிய பவுலின் தியாகம்.

அப்போஸ்தலனாகிய பவுலுக்காக எதையும் செய்யத் துணிந்த ஒரு குடும்பத்தைப் பற்றி பவுல் இப்படியாகக் கூறுகிறான்: ‘கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாவையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். ‘அவர்கள் ‘என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்’ (ரோம 16:3, 4) என்பதாக. இது ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாவின் தியாகம்.

பிதாவாகிய தேவனைப் பாருங்கள், தன்னுடைய சொந்த குமாரனென்றும் பாராமல், இயேசுவையே தியாகமாகத் தந்துவிட்டார். C. T. ஸ்டட் என்ற ஊழியக்காரர், ‘கிறிஸ்து எனக்காக மரித்திருப்பாரானால், அவருக்காக நான் செய்ய நினைக்கும் எத்தியாகமும் பெரிதல்ல’ என்று சொன்னார்.

வாழ்க்கையில் தேவனுக்கு அடுத்த காரியங்களில் எடுக்கும் ஒவ்வொரு தியாகத்திற்கும் பிரதிபலன் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள். எஸ்தர் யூத ஜனங்களுக்காகத் தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை என்று ராஜாவின் சமூகத்தில் போய் நின்றாள். அதன் விளைவாக ஆமான் என்ற பகைவன் அழிக்கப்பட்டான், யூதர்கள் காக்கப்பட்டார்கள், எஸ்தரின் சித்தப்பா மொர்தகாயும் பிரதம மந்திரியாக உயர்த்தப்பட்டான்.

நாமெல்லாரும் வேலையில் ஏதாவது பிரச்சனை வந்தால், வேலையை விடுகிறோம். ஆனால், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் வலைகள் கிழியத்தக்க மீன்கள் கிடைத்தபிறகு தங்கள் வேலையை விட்டு இயேசுவின் பின் சென்றார்கள். அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள் என்று லுக் 5:11 கூறுகிறது.

நாமும் கூட நமக்கு இருக்கும் இன்னும் கொஞ்ச நாட்களில் பிதாவைப் போல, இயேசுவைப் போல, மோசேயைப் போல, பவுலைப் போல, ஆக்கில்லா-பிரிஸ்கில்லாவைப் போல, எஸ்தரைப் போல, C. T. ஸ்டட் போல நம்மையே இயேசுவுக்காகத் தியாகமாக ஈந்தளிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *