பிந்தின மகிமை (The latter Glory)

ஆகாய் 2 : 9 முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QtcAEMoryqE

இஸ்ரவேலரின் கைகளில் இருந்த தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி பிடிபட்டுப்போன சம்பவத்தை நாம் 1 சாமுவேல் 4-ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனுடைய பிரசன்னத்திற்கு அடையாளமாக இருக்கிறது. பெலிஸ்தியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைப் பிடித்துச்செல்லும்படி அஜாக்கிரதையாயிருந்த ஏலியின் குமாரர்களைப் போல, கர்த்தருடைய ஜனங்கள் பிசாசுக்கு இடம்கொடுக்கிறவர்களாய் காணப்படக்கூடாது.

தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள் என்று 1 சாமு 4:21 கூறுகிறது. இன்றும் அநேக சபைகளின் நிலைமை இந்தச் சூழ்நிலைதான் காணப்படுகிறது. மாத்திரமல்லாமல், அநேக விசுவாசிகள் தங்கள் குடும்பங்களிலும் தேவனுடைய மகிமையை இழந்துபோனவர்களாய் காணப்படுகிறார்கள். இழந்த தேவ மகிமையை திரும்பவும் கொடுக்க கர்த்தர் பிரியமாய் இருக்கிறார். நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள் என்று எசேக்கியேல் 36:25-ல் ஆண்டவர் வாக்குக்கொடுத்துவிட்டார். அவர் நம்மைச் சுத்திகரிக்கும்போது, நம்முடைய சபையிலும், குடும்பத்திலும் முந்தின மகிமையை விடப் பிந்தின மகிமை பெரிதாயிருக்கும்.

ஆண்டவருடைய முதலும் பிரதானமுமான திட்டத்தைப் பவுல் கூறுகிறான். கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல், பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் (எபேசி 5:27) என்பதாக. பிந்தின ஆலயத்தின் மகிமை கறைதிரை இல்லாத மகிமையுள்ள சபையாக இருக்கும். முந்தின ஆலயத்தின் மகிமையே ஆசாரியர்கள் நிற்கக்கூடாதபடி இருந்தது என்றால், பிந்தின ஆலயத்தின் மகிமை எவ்வளவு பெரியதாய் இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். முந்தின ரசத்தைப் பார்க்கிலும் பிந்தின ரசம் சுவையாகவே இருக்கும்; முன்மாரி மழையை விடப் பின்மாரி மழை அதிகமாகவே இருக்கும். அதுபோல முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும். கடைசி காலம் கர்த்தருடைய மகிமை வெளியரங்கமாகிற காலம். அந்த காலத்தின் வாசற்படியில் நாம் வந்துவிட்டோம். எந்த ஒரு வினாடியும், பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பவும், அவருடைய மகிமையைச் சுமந்து செல்லும் பாத்திரமாக உங்களை மறுரூபப்படுத்தவும் அவர் ஆயத்தமாயிருக்கிறார். நீங்களும் அவர் மகிமையைக் காண வாஞ்சையாய் இருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *